தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் தொடங்கியது. முன்னதாக, கடந்த வியாழக்கிழமை (செப்டர்ம்பர் 3) நடைபெற்ற சட்டப்பேரவையின் போது பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு திங்கள் கிழமை பதிலளிக்கப்போவதாகவும், யாரும் எழுந்து வெளியில் போகக்கூடாது எனவும் பேசியிருந்தார்.
முதல்வரின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தான், இன்று எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்ததுடன், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சட்டப்பேரவையில் பேசினார். அப்போது, சட்டப்பேரவையில் திமுகவினர் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். எனினும், முதல்வர் தனது உரையை முழுமையாக ஆற்றிய நிலையில், முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க திமுக நேரம் கேட்டனர்.
ஆனால், சபாநாயகர் நேரம் கொடுக்கவில்லை. இதையடுத்து, திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, வாய்ப்பு கொடுப்பதாக சபாநாயகர் உறுதியளித்த நிலையில், தங்கள் இருக்கைகளில் திமுக உறுப்பினர்கள் அமர்ந்தனர். எனினும், தொடர்ந்து திமுக உறுப்பினர் கூச்சலிட்ட நிலையில், சபாநாயகர் திமுகவினர் பேச அனுமதிளிக்கவில்லை. இதையடுத்து, எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
இதைதொடர்ந்து, சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”முதலமைச்சர் பேசி முடித்தவுடன் நாங்கள் பேசுவதற்கு அனுமதி கேட்டோம்.. முதலில் அனுமதி தரப்படும் என்று சபாநாயகர் ஒத்துக் கொண்டார் ஆனால் பிறகு வாய்ப்பு அளிக்கவில்லை. யாருடைய அழுத்தம் காரணமாகவோ அவர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். முதல் 15 நிமிடங்கள் காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து தங்கள் ஆட்சியில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பேசினார். அப்போது நாங்கள் அமைதியாக தான் இருந்தோம். 15 நிமிடங்களுக்கு பிறகு முதல்வர் விஜய் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் திமுகவினர் மீது குற்றச்சாட்டு வைத்தார். திமுக மீது பழியை போடாமல், தவெக ஆட்சிக்கு வந்துவிட்டது என்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஆனால், இப்போதும் திமுக ஆட்சி நடந்துகொண்டிருப்பது மாதிரி முதல்வர் விஜய் பேசியிருக்கிறார். எங்கள் மீது வைத்தது குற்றச்சாட்டுக்கள் மட்டுமே.