தமிழ்நாட்டில் 2 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 மணி நேர நேர நிலவரப்படி, மதுராந்தகம் தொகுதியில், 70.31 சதவீத வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் 68.08 சதவீத வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
இதற்கிடையில் , 2026 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிறகு தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, தற்போது தவெக இணைந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்கும் சத்யபாமா சம்பந்தமான வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தது.
அதில், ”கடந்த தேர்தலில் 31 கோடி ரூபாய் செலவு செய்தேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. வேற வழியில்லாமல் இங்கு (தவெக) சேர்ந்துள்ளேன். இங்கு சாப்பாட்டுக்காக மட்டுமே 15 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளேன்” என அவர் பேசுவது போல காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
எனினும், வாக்குப்பதிவு நாளான இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்யபாமா, இந்த வீடியோ சித்தரிக்கப்பட்டது எனவும் என்னுடைய வெற்றி வாய்ப்பை சீர்குலைக்க இந்த வீடியோ பகிரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தச்சூழலில் தான், சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் கணக்கு தொடர்பாக, தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா மீது தேர்தல் ஆணையத்தில் திமுக எம்எல்ஏ ஆஸ்டின் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”தாராபுரம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா வீடியோவில் பேசியதை பார்த்திருப்பீர்கள். அமைச்சர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் தங்குவதற்கு நட்சத்திர ஹோட்டலில் லட்சக்கணக்கில் தொகை செலவு செய்ததாக வீடியோவில் பேசியிருந்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி வேட்பாளர் 40 லட்ச ரூபாய் செலவு செய்யலாம். ஏற்கனவே தேர்தல் செலவு கணக்கை கண்காணிக்க தேர்தல் ஆணையம் ஒருவரை நியமித்துள்ளது. ஒவ்வொரு நாள் செலவையும் குறிப்பிட வேண்டும்.
ஆனால், 14 லட்சம் ரூபாய் தங்குவதற்கு மட்டும் அறை ஒதுக்கீடு செய்வதற்கு மட்டும் செலவு செய்திருக்கிறேன் என்று வேட்பாளர் சத்தியபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து புகார் மனுவை அளித்துள்ளோம். இந்த செலவு தொகை தொடர்பாக வேட்பாளர் அல்லது அவர்களின் முகவர்கள் பதிவு செய்திருக்கிறார்களா என்று ஆராய வேண்டும். ஒருவேளை இந்த செலவு தொகை பதிவு செய்யப்படவில்லை என்றால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒரு வேட்பாளர் செலவு செய்தார் என்றால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் . 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது; அதிகபட்சமாக ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் விதிமுறையில் உள்ளது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.