DMK MLA Markandeyan  PT
தமிழ்நாடு

திமுக MLA அதிரடி கைதுக்கு காரணம் என்ன..? விஜய் குறித்த பேச்சால் சர்ச்சை!

முதல்வர் விஜய் மீது அவதூறு, மிரட்டல் பேச்சு குற்றச்சாட்டில் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

ஒரே மாதத்தில் இரண்டாவது திமுக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதால் தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மார்க்கண்டேயன், தவெக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டும் தொனியிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சமூக வலைதள எதிர்ப்புகள், காவல் புகாராக மாறி, இன்று காலை அவர் கைது செய்யப்பட்டதால் திமுக-தவெக மோதல் தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து தவெக ஆட்சியை பிடித்து, அக்கட்சித் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அதன் பின்னர் திமுக மற்றும் தவெக இடையேயான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

DMK MLA Markandeyan

இதனிடையே கடந்த ஜூன் 20-ம் தேதி திமுக பொதுக்​கூட்​டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், முதல்​வர் விஜய் குறித்து ஒரு​மை​யிலும், அவதூறாகவும் பேசி​ய​தாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரில் அனிதா ராதாகிருஷ்ணன் உடனடியாக கைது செய்யப்பட்டது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கிய நிலையில், அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் தொனியும் பேசியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

DMK MLA Markandeyan

இவரின் பேச்சுக்கு சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், காவல்துறையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்கனவே இதுபோன்ற அவதூறு பேச்சுக்காக கைது செய்யப்பட்ட நிலையில், அதே மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு திமுக எம்.எல்.ஏவான மார்க்கண்டேயனும் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.