மக்கள் நீதி மய்யம் கட்சி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுகவிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளின் பட்டியலை சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளது. கமல்ஹாசன் தலைமையில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, திமுக அமைச்சர்கள் கமல்ஹாசனை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு, கூட்டணியில் தொகுதி பங்கீடு நிலவரத்தை முன்னேற்றும் வகையில் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் 2026 சட்டப் பேரவை தேர்தலுக்காக கூட்டணி கணக்குகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கி இருக்கக்கூடிய சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுகவிடம் தொகுதி பங்கீடு குறித்து பட்டியலை சமர்ப்பிக்கவிருப்பதாகவும், பட்டியலை கேள்விபட்ட திமுக அமைச்சர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து ராஜ்யசபா பதவியை மக்கள் நீதி மய்யம் பெற்றது. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு பொதுச் சின்னமாக டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கும் சூழலில், நேற்று முன்தினம் அவசர செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டி சுமார் 3 மணி நேரம் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் கமல்ஹாசன்...
இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மற்றும் கோவையை மையப்படுத்தி 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தயார் செய்து திமுக தலைமையிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வெற்றி வாய்ப்பு தொடர்பாகவும் வேட்பாளர், விருப்ப மனு உள்ளிட்டவை தொடர்பாகவும் நிர்வாகிகள் உடன் விரிவான ஆலோசனையை கமல்ஹாசன் நடத்தினார்.
இந்த நிலையில் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் திமுக அமைச்சர்கள் சேகர் பாபு, சாமிநாதன் உள்ளிட்டோர் கமல்ஹாசனை தனித்தனியாக சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சந்திப்புக்கான காரணம் குறித்து வெளிப்படையாக இரு தரப்பிலும் கருத்து தெரிவிக்காத நிலையில், இந்த சந்திப்பு திமுக - மநீம கூட்டணியில் தொகுதி பங்கீடு நிலவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.