திமுகவினர் பணம் பட்டுவாடா
திமுகவினர் பணம் பட்டுவாடா புதியதலைமுறை
தமிழ்நாடு

நாமக்கல்: வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தால் ரூ50; கூட்டத்திற்கு வந்தால் ரூ.100-களைகட்டிய பணப்பட்டுவாடா!

யுவபுருஷ்

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் பரப்புரையை தொடங்கியுள்ளன. நாமக்கல் மக்களவைத் தேர்தல் வேட்பாளராக திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கோரையாறு பகுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வேட்பாளர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, வேட்பாளர் மாதேஸ்வரனுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலரும் ஆரத்தி எடுத்து வரவேற்பு தந்தனர். ஆரத்தி எடுத்தவர்கள் எல்லாம் ஆதரவாளர்கள் என்ற நினைத்த நிலையில், வாக்கு சேகரிப்பு முடிந்து சென்றபோது வடிவேலு காமெடி பாணியில், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுகவினர் தலா 50 ரூபாயை பட்டுவாடா செய்ததாக தெரிகிறது.

அத்தோடு, கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் பட்டுவாடா செய்த வீடியோ வெளியாகியுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடா செய்வதை தேர்தல் பறக்கும் படையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் மேலோங்கியுள்ளது.