"கூட்டணிக் கட்சி என்பதற்காக போராட்டமே நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் போராட்டமும் நடத்திவிட்டு, போராட்டம் நடத்த அனுமதிப்பது இல்லை என்று சொல்வது, கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல. மனச்சாட்சிக்கும் அறமல்ல. தன் நெஞ்சே தன்னைச் சுடாதா..?"
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனின் காட்டமான விமர்சனத்திற்கு திமுக கொடுத்த பதிலடியின் ஒரு பகுதிதான் இது.
இந்திய மார்க்சிஸ்ட் கட்சி, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்திவிட்டீர்களா என்று முதலவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார் அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன். அவரது பேச்சில் தொடங்கிய கலகம், இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி விமர்சிக்கும் அளவுக்கு வந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டு காலம் இருக்கும் நிலையில், நடக்கும் இந்த மோதலை பார்க்கும்போது, திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. என்ன நடக்கிறது? விரிவாக பார்க்கலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு கடந்த 3ம் தேதி அன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், பல்வேறு விவகாரங்களை எடுத்துப்பேசினார். அதில், ஆளும் அரசை விமர்சிக்கும் வகையிலும் சில விஷயங்கள் இருந்தன.
குறிப்பாக, அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக அரசியல் செய்ய நினைப்பதாக விமர்சித்த பாலகிருஷ்ணன், அண்ணா பல்கலையில் மட்டுமல்ல, நாட்டின் எந்த பகுதியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நிகழும்போது அதற்கு எதிராக போராடும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருந்து வருகிறது என்று பேசினார்.
ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னாலே காவல்துறை வழக்கு போடுகிறது. மாண்புமிகு மரியாதைக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது? போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?’ எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வெடித்துப்பேசினார் பாலகிருஷ்ணன்.
இந்த பேச்சுதான் திமுக கூட்டணியில் புயலை கிளப்பியுள்ளது. ஆம், அண்ணா பல்கலை விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மௌனம் சாதிப்பதாக விமர்சனம் எழுந்து வருகிறது. அத்தோடு, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுவது, கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கே. பாலகிருஷ்ணனின் பேச்சு கவனம் ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் பேச்சு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “நேற்று முன்தினம் வரையில் இந்த ஆட்சியினுடைய செயல்பாடுகளை மனதார புகழ்ந்தவர்தான் பாலகிருஷ்ணன். அவருடைய நெருடல் என்னவென்று புரியவில்லை. தெரிந்தால் அதற்கு உண்டான பரிகாரத்தை காண முடியும். குற்றம்சாட்ட வேண்டும் என்றே குற்றம் சாட்டுபவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என்று பதிலளித்தார்.
இந்த நிலையில்தான், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் பேசிய பேச்சு, தோழமைக்கான இலக்கணமாக இல்லை” என்று திமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான முரசொலி விமர்சித்து எழுதியுள்ளது.
‘இது ‘தோழமைக்கு’ இலக்கணம் அல்ல’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்த தலையங்கத்தில், பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் அவசர நிலைப் பிரகடனமா?’ என்று கே.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கு ‘தினமலர்’கொடுத்த முக்கியத்துவத்தைப் பார்க்கும் போதே, தி.மு.க.ஆட்சிக்கு எதிரான சதி கூட்டத்துக்கு தீனி போடத் தொடங்கிஇருக்கிறார் கே.பி. என்பது தெளிவாகத் தெரிகிறது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் நின்று கொண்டுதான் அவரே பேசுகிறார். அவசர நிலை என்றால் என்ன என்றே தெரியாத நிலையிலா அவர் இருக்கிறார்? முதலமைச்சரை எப்போதும் தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் அவர் விழுப்புரத்தில் எதற்காக வீதியில் போய் நின்று இப்படிக் கேட்க வேண்டும்? தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். பின்னர், அவரே போராட்டம் நடத்த உரிமை இல்லையா என்றும் கேட்கிறார். இதில் எது ஒரிஜினல் கே.பி.?
கூட்டணிக் கட்சி என்பதற்காக போராட்டமே நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் போராட்டமும் நடத்திவிட்டு, போராட்டம் நடத்த அனுமதிப்பது இல்லை என்று சொல்வது கூட்டணி அறமும் அல்ல, அரசியல் அறமும் அல்ல. மனச்சாட்சிக்கும் அறமல்ல. தன் நெஞ்சே தன்னைச் சுடாதா? சென்னையில் ஒரு மாணவி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி, ‘தமிழ்நாட்டில் மாணவிகளுக்குப் பாதுகாப்பே இல்லை’ என்று ‘ட்ரெண்ட்’ உருவாக்கத் துடிக்கிறார்கள் சிலர். அதற்காகப் போராட்டம் என்ற பெயரால் குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து எதற்காக வக்கீலாக மாறுகிறார் பாலகிருஷ்ணன்? அப்படிக் காட்ட வேண்டியஅவசியம் என்ன வந்தது?
எதிரிக்கட்சியாக நடந்து கொண்டு எடுத்தெறிந்து பேசினால்தான் கவனம் கிடைக்கும் என்ற நோக்கத்தோடு அளிக்கப்படும் பேட்டிகளும் பேச்சுகளும், மீடியாக்களின் மூலமாக ஏற்படுத்தும் பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கருத்துச் சொல்லிக் கொண்டு போவது தோழமைக்கான இலக்கணம் அல்ல. தோழமையைச் சிதைக்கும் என்பதை பல்லாண்டு அனுபவம் கொண்ட தோழர் உணராமல் இருப்பதே வருத்தமளிக்கிறது. விழுப்புரம் மாநாட்டில் கே.பாலகிருஷ்ணன் வெளிச்ச விதைகளை விதைக்கவில்லை” என்று விமர்சித்துள்ளது முரசொலி.