திருவாரூர் விஜய் பரப்புரை எக்ஸ்
தமிழ்நாடு

சூடு பிடிக்கும் தவெக - திமுக போர்? திணறும் திருவாரூர்... முதல்வரின் எக்ஸ் பதிவு.. என்ன நடக்கிறது?

விஜய்யின் இரண்டாவது சுற்றுப்பயணம் திருவாரூரில் நடந்து முடிந்த நிலையில், அதே திருவாரூரில் கூட்டம் போட்டு விஜய்க்கு பதிலடி கொடுத்ததிருக்கிறது திமுக. தற்போது திமுக, தவெக-விற்கு எதிர்வினையாற்றத் தொடங்கி இருப்பது அரசியல் களத்தில் அனலை கூட்டியுள்ளது.

Uvaram P

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி என்று விஜய் சொல்ல, திமுகவுடன் போட்டி போட விஜய்க்கு தகுதியே இல்லை என்று தாக்குகிறார் அமைச்சர் கே.என் நேரு. விஜய்யின் இரண்டாவது சுற்றுப்பயணம் திருவாரூரில் நடந்து முடிந்த நிலையில், அதே திருவாரூரில் கூட்டம் போட்டு விஜய்க்கு பதிலடி கொடுத்துள்ளது திமுக.. தவெக தங்களுக்கு போட்டியே இல்லை என்று சொல்லும் திமுக, அதே நேரத்தில் தவெக மீது போர் தொடுக்கத் தொடங்கி இருப்பது அரசியல் களத்தில் அனலை கூட்டியுள்ளது.. என்ன நடக்கிறது விரிவாக பார்க்கலாம்..

தமிழ்நாடு தழுவிய அளவில் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கும் தவெக தலைவர் விஜய், கடந்த சனிக்கிழமை அன்று நாகை, திருவாரூரில் மக்கள் சந்திப்பு பயணத்தை நடத்தினார். இதில், இரு இடங்களிலும் உரையாற்றுகையில் திமுக மீதான விமர்சனத்தை கூர்மைபடுத்தினார் விஜய். குறிப்பாக, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. 2026ல் திமுக - தவெக இடையேதான் போட்டி என்றார். அதை அவர் சொன்னதோடு, கூடியிருந்த மக்களையும் சொல்ல வைத்தார். இந்த நிலையில்தான், திருவாரூரில் எங்கு விஜய் மக்களை சந்தித்தாரோ அதே இடத்தில் மறுநாளே கூட்டத்தை நடத்தி விஜய்க்கு பதிலடி கொடுத்திருக்கிறது திமுக.

ஓரணியில் தமிழ்நாடு திருவாரூர் பொதுக்கூட்டம்

ஆம், 20ம் தேதி அன்று திருவாரூர் தியாகராஜர் கோவில் தெற்கு வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் உரையாற்றிவிட்டுச் சென்றார் விஜய். அதற்கு மறுநாளே அதே இடத்தில் திமுக சார்பில் பிரம்மாண்டமாக கூட்டம் நடத்தப்பட்டது. ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்.. ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பொதுக்கூட்டத்தை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் கூட்டினார். இதில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா, அமைச்சர் நேரு உள்ளிட்ட திமுக முக்கியப்புள்ளிகள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய அமைச்சர் கே.என் நேரு, ”திமுக, அதிமுக என தமிழகத்தில் ஆட்சி மாறி மாறி நடைபெற்று வருகிறது. ஆனால், இன்று.. எங்களுக்கும் திமுகவிற்கும் தான் நேரடியாக போட்டி என்று ஒருவர் சொல்கிறார். திமுகவோடு போட்டி போட அவருக்கு தகுதியே இல்லை என கூறிக் கொள்கிறேன்” என்று விஜய்க்கு பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கூட்டத்தை நான் பார்க்கிறேன் என்று கலைவாணன் சொன்னாரு.. முதல் நாள்தான் அவன் வந்துட்டு போறான்.. நீ மறுநாள் அதே இடத்தில் கூட்டம் போடுறியான்னு கேட்டேன்.. வா ண்ணா நா அத அடிச்சு காமிக்கிறேன்னு சொன்னார்.. அடிச்சு காமிச்சாச்சு” என்று விஜய்யை ஒருமையில் பேசியதோடு, அவர் அளவுக்கு கூட்டத்தை கூட்டிவிட்டதாகவும் கூறினார் நேரு..

அடுத்தடுத்த நாட்களில் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற தவெக, திமுக கூட்டங்களின் ட்ரோன் காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்த நேரத்தில், முதல்வர் ஸ்டாலினின் பதிவும் கவனம் ஈர்த்திருக்கிறது. தனது சமூகவலைதளத்தில் பதிவிட்ட முதல்வர், “கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். அதில், திருச்சி, திருவாரூர், அரியலூர் என 8 மாவட்டங்களில் நடந்த திமுக கூட்டங்களின் கழுகுப்பார்வை புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதில் கவனிக்கத்தக்கவை திருச்சி, திருவாரூர் மற்றும் அரியலூர் புகைப்படங்கள்தான்.. கடந்த இரு சனிக்கிழமைகளில் இந்த மாவட்டங்களில் விஜய் பரப்புரை செய்து சென்ற நிலையில், முதல்வரின் பதிவு கவனம் பெறுகிறது.

சட்டமன்ற தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி என்று விஜய் சொல்லி வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் உக்கிரமாக தாக்கத்தொடங்கியுள்ளது திமுக. கடந்த 55 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், தமிழகத்தில் திமுக - அதிமுகவுக்கும் இடையே முதல் இடத்திற்கான நேரடி போட்டி நடந்திருக்கிறது. 2006 வாக்கில் விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசத்தின்போது மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், 2011ம் ஆண்டு தேமுதிக அதிமுகவோடு கூட்டணி வைத்தது.

தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின்

அந்த தேர்தலில் திமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், 2019ம் ஆண்டு தேர்தலில் இருந்து தொடர் வெற்றிகளை ருசித்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தல் வெற்றி, 2024ல் மக்களவைத் தேர்தலில் 40/40 என்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், 2026லும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்து வரும் சூழலில், தவெக தலைவர் விஜய் திமுகவுக்கு சவால் விட்டு வருகிறார். தவெக Vs திமுக என்று சொல்ல விஜய்க்கு தகுதியே இல்லை என்று சொல்லும் திமுக, எதிர்ப்பை கூர்மைபடுத்துவதன் மூலம் செயலில் தவெகவை எதிர்க்கத்தொடங்கிவிட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.