தவெக| ஜேசிபி மூலம் விஜய்க்கு மாலை.. மாவட்ட செயலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு!
தவெக பரப்புரையின் போது தனியார் சொத்துக்களை சேதப்படுத்திய விவகாரத்தில் ஏற்கனவே, தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது தவெக தலைவர் விஜய்க்கு ஜேசிபி மூலம் மாலை அணிவித்த சம்பவத்திற்கு நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் சுற்றுப்பயணத்தை செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை தோறும் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். டிசம்பர் 20 வரை நடக்கும் இந்த சுற்றுப்பயணத்தில் முதற்கட்டமாக திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தனது பரப்புரையை முடித்திருந்தார்.
இந்த சுற்றுப்பயணக் கூட்டங்களில் தவெக தொண்டர்கள் அனுமதியில்லாமல் மரங்கள் மற்றும் கம்பங்களில் ஆபத்தான முறைகளில் ஏறுவதாகவும், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து, உயர்நீதிமன்றமும் தவெக தொண்டர்களை ஒழுங்குபடுத்தும் கடமை அந்தக் கட்சியின் தலைவருக்கே உள்ளது எனத் தெரிவித்ததோடு, பரப்புரை நடந்த இடங்களில் பொதுச்சொத்துக்கள் சேதமைடைந்தால், அதற்கான இழப்பீட்டையும் தவெக அளிக்குமாறு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையில் செப்டம்பர் 20 ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஈடுபட்டார்.
முதலில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரப்புரையை முடித்துக்கொண்ட விஜய். சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றார். அப்போது வழியில் அவருக்கு கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட விஜய் அங்கிருந்து புறப்பட்டு, திருவாரூரில் பரப்புரை நடக்கும் இடத்திற்குச் சென்று மக்களிடம் உரையாற்றினார்.
இந்தநிலையில், திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் மாலை அணிவித்த விவகாரத்தில், பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் அனுமதி இல்லாமல் செயல்பட்டதாக கூறி திருவாரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதன் உட்பட நான்கு பேரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த பரப்புரையில், தனியார் சொத்துக்கள் மற்றும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தவெகவினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்திலும் தவெகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.