சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்த பிறகு கட்சியில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் முன்னாள் MLA எழிலனின் பதிவு பேசும்பொருளாகி வருகிறது.
செய்தியாளர்: விக்னேஷ்
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பின், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தத் தோல்விக்குத் தான் முழுப் பொறுப்பேற்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். திமுகவின் இந்தத் வீழ்ச்சி மற்றும் அதற்குப் பிந்தைய தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் கவனம் பெற்று வருகிறது.உதயநிதி ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமும், குடும்பத்தின் அதிகப்படியான அதிகார ஆதிக்கமும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் விஜய் தலைமையிலான தவெக வாக்குகளைப் பிரித்ததும் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, தவெகவின் புதிய அரசியல் வருகை திமுகவின் வாக்கு வங்கியைப் பெருமளவில் பாதித்தது குறிப்பிடத்தக்கது. தோல்விக்குப் பின், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியைக் கடந்து கட்சியை மீண்டும் பலப்படுத்த தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டார்.
"வெற்றிக்கு நான் எப்படிப் பெருமை கொள்கிறேனோ, அதேபோல தோல்விக்கும் நானே முழுப் பொறுப்பு" என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார். தோல்விக்கான காரணங்களை தொகுதி வாரியாக ஆராய 36 பேர் கொண்ட கள ஆய்வு குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. இக்குழுவினர் 20 நாட்களுக்குள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கட்சியின் பலவீனங்கள் மற்றும் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை நேரடியாகப் பெற புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். சரியாகச் செயல்படாத மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தாராளமாக பதவியில் இருந்து விலகிக் கொள்ளலாம் எனவும், கட்சியில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் மற்றும் இளைஞரணிக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறிய நிலையில், தோல்விக்குக் காரணமானவர்கள் மீது விரைவில் அதிரடி நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் MLA எழிலன் தனது X தளத்தில் 60 வயதுக்கு மேற்பட்டர்களுக்கு இடமில்லை என்ற திரைப்பட காட்சியை பதிவிட்டுள்ளளார். திமுக தோல்விக்கான காரணம் குறித்து ஆராய, கட்சிக் குழு அமைத்துள்ள நிலையில், இப்பதிவு அதிக கவனம் பெற்று வருகிறது.
இதனை அரசியலோடு ஒப்பிட்டு பல்வேறு கருத்துகளை நெட்டிசன்கள் முன்வைத்து வருகின்றனர். முன்னதாக, தேர்தலுக்கு முன் தவெகவினரை தற்குறி என்று குறிப்பிட வேண்டாம் என்றும் இளம் தலைமுறையினரை நாமே அரசியல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். மற்ற நிர்வாகிகளின் கருத்தைவிட எழிலனின் கருத்து அதிக கவனம் பெறும் நிலையில் இந்தப் பதிவு திமுகவில் நடக்கப்போகும் மாற்றத்தை உணர்த்துவதாகவே பார்க்கப்படுகிறது.