20 நாட்களில் முழு Report.. "விருப்பம் இல்லாதவர்கள் விலகுங்கள்” - திமுக கூட்டத்தில் ஸ்டாலின் அதிரடி!
சட்டமன்றத் தோல்விக்குப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி, 20 நாட்களில் மாநிலம் முழுவதும் கள ஆய்வு செய்து முழு அறிக்கை தர குழு அமைப்பதாக ஸ்டாலின் அறிவித்தார். தோல்விக்கு தானே பொறுப்பெடுப்பதாகவும், செயல்பட விருப்பமில்லாதவர்கள் மனப்பூர்வமாக விலகலாம் என்றும் எச்சரித்து, டிஜிட்டல், சமூக வலைத்தளப் போராட்டத்தை வலுப்படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்திருக்கும் நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். திமுக மீண்டும் வெற்றியடையும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் சொன்னது. திமுகவும் 2.0 ஆட்சிக்கு தயாராகி வந்தது. ஆனால் , அந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையில் விஜய்யின் தவெக இந்த தேர்தலில் வெற்றிபெற்றது. ஆளும் கட்சியாக இருந்த திமுக தற்போது எதிர்க்கட்சியாக இருக்கின்றது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தது தான் மிகப்பெரிய அதிர்ச்சியாக பார்க்கப்படுகின்றது. முக்கிய அமைச்சர்கள் பலரும் தோல்வியடைந்தனர்.
இந்நிலையில், தேர்தலில் தோல்வியடைந்தது குறித்து இந்த மா செ கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்து இருக்கிறார். மாநிலம் முழுவதும் கள ஆய்வு செய்து 20 நாட்களில் அறிக்கை அளிப்பதற்காக குழு அமைக்கப்படும். டெக்னாலஜிய பயன்படுத்துறதுல, இனி நாம கூடுதல் கவனம் செலுத்தணும். கட்சியினர் ஒவ்வொருத்தரும் சமூக வலைத்தளங்கள்ல நேரடியா பங்கெடுத்து செயல்படணும். டீக்கடையில் பேசிய அரசியலை சமூக வலைத்தளங்களில் பேசுங்கள்.
சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்..
கட்சியின் தலைவர் என்ற முறையில, நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேத்துக்குறேன். மாவட்டச் செயலாளர்கள்தான் மாவட்டத்துக்கு முக்கியம். அதுக்காக, மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே முக்கியம்னு ஆகிட கூடாது. ஒருவேளை யாராவது, “என்னால செயல்பட முடியாது”-னு நினைச்சா, மனப்பூர்வமாக முன் வந்து விலகிக்கலாம். திமுகவில் அமைப்பு ரீதியாக மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் தோல்வி குறித்து, திமுகவின் தவறு மற்றும் எதிர்பார்க்கும் மாற்றம் குறித்து திமுக தொண்டர்கள் கருத்து சொல்ல புதிய இணையதளம் உருவாக்கப்படும். இதுவரை எந்த அரசும் செய்திடாத திட்டங்களை நாம் செய்து இருக்கிறோம் ஆனாலும் தோல்வியையோ சந்தித்து இருக்கிறோம். இதற்கான காரணத்தை ஆராய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த கூட்டத்தில் ஆலோசித்து இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் திமுகவினர் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியிருப்பதால், இனிமேல் கருத்தியல் ரீதியான போர் நடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

