திமுக கூட்டணி Pt web
தமிழ்நாடு

பாஜகவுக்கு எதிரான திமுக கூட்டணி.. சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி.. இன்றைய நிலை என்ன?

தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றிக் கூட்டணி என நிரூபித்த திமுக கூட்டணி தற்போது கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. பாஜகவுக்கு எதிராக கொள்கை கூட்டணி என்று ஸ்டாலினால் வர்ணிக்கப்பட்ட திமுக கூட்டணியின் இன்றைய நிலை குறித்து பார்க்கலாம்.

PT WEB

2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த திமுக கூட்டணியும், மக்கள் நலக்கூட்டணியும் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு எதிராக அணி திரண்டன. திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவை அதில் அங்கம் வகித்தன. நாளடைவில் அந்த கூட்டணியில் மதிமுகவும் இணைந்தது. அதன் பிறகு தொடர் வெற்றிகளைக் குவித்தது இந்தக் கூட்டணி. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல், இரு உள்ளாட்சித் தேர்தல்கள் என்று வெற்றிமேல் வெற்றி ஈட்டிய திமுக கூட்டணி, 2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு தற்போது முழுமையாகச் சிதறத் தொடங்கியுள்ளது.

திமுக கூட்டணி

2021 தேர்தலில் காங்கிரஸுக்கு 25, இரு கம்யூனிஸ்டுகள், விசிக, மதிமுகவுக்கு தலா 6, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களை வழங்கியது. ஆனால், 2026இல் காங்கிரஸ் மற்றும் விசிகவுக்கு மட்டுமே தொகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக, முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தது. கூடவே சிறு கட்சிகளை தனிச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காமல், தங்களது உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடச் சொல்லி நெருக்கடி கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் நீதி மையம் ஆகியவை திமுகவுடன் முரண்பட்டதோடு, தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தன.

அதேநேரம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி போன்ற புதிய வரவுகளும், ஆதித்தமிழர் பேரவை, ஆம் ஆத்மி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சிறு அமைப்புகளின் ஆதரவு இருந்தும் திமுகவால் 2026 தேர்தலில் வெல்ல முடியவில்லை. தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே, திமுக கூட்டணி முழுமையாக உடைந்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து முதல் ஆளாக விலகிய காங்கிரஸ், தவெக அரசுக்கு ஆதரவளித்ததோடு, அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. அதேபோல், விசிக, முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், முதலில் வெளியிலிருந்து ஆதரவளிப்பதாக கூறியிருந்தன. ஆனால், தற்போது விசிகவும் முஸ்லிம் லீக்கும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளன. இன்னொருபக்கம் மதிமுகவும் திமுக கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டது.

விஜய் - இடதுசாரிகள்

விசிகவோ தேர்தல் நேரத்தில் முடிவு என தன் நிலையைத் தள்ளிப்போட்டுள்ளது. முக்கியத் தோழமைகள் வெளியேறிய சூழலில், ‘இனி திமுக தனித்துத்தான் போட்டியிட வேண்டும்' எனத் தொண்டர்களும், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவும் வலியுறுத்த... ‘அதை பரிசீலிப்போம்' என திமுக தலைவர் ஸ்டாலினும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். அதேநேரம், மமக, மஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள், இன்னும் திமுக கூட்டணியிலேயே தொடருகின்றன. இருப்பினும் 9 ஆண்டுகால மெகா கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதால், தனித்து களம் காணும் திமுகவின் அடுத்த வியூகம் என்னவாக இருக்கும்? என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.