2021 சட்டமன்ற தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வென்றிருந்தார். அடுத்த சில வருடங்களில், உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததை அடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி வெற்றிபெற்று இரண்டு ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவந்தார். சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, மீண்டும் இடைத்தேர்தலை கண்டுள்ளது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி.
இப்படி நான்கு ஆண்டுகளில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 முறையும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நிலையில், இம்முறை திமுக நேரடியாக களமிறங்குகிறது. திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளராக இருக்கும் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், அதிமுக, தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர். தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் இருந்து ஒதுங்கிக் கொண்டது.
இன்றே வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் எனும் நிலையில் பிரதான கட்சிகளின் இரு வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை இன்று தாக்கல் செய்தனர்.
வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி, “ஈரோடு மஞ்சள் மாநகரமாக இருந்தது. தற்போது புற்றுநோய் மாநகரமாக மாறி மக்கள் வேதனைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். நெசவாளர்களின் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவை அனைத்திற்கும் காரணம் திமுகவின் கொடுமையான ஆட்சி அராஜக ஆட்சிதான். அதை வேரோடு பிடுங்கி எறியாமல் எங்களுக்கு வேறு பணி இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னர் திமுக வேட்பாளர் சந்திரகுமாரும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அவரிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த சந்திரகுமார், “பொய்யும் புரட்டும் பேசிக்கொண்டு இருக்கிறவர்கள், அரசியல் கட்சிகளிலேயே அக்கட்சி ஒரு வியாதி. அவர்களுக்கெல்லாம் பதில்சொல்ல நான் தயாராக இல்லை. நவீன அரவியல் வளர்ச்சியில் நாடு எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. ஆனால், ‘கட்டைவண்டியில் போ’ என சொல்பவரை தலைவராக வைத்துக்கொண்டு, அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் வந்து, அவர்களோடு நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதை காலத்தின் கொடுமையாக பார்க்கிறேன். தனிப்பட்ட முறையில் இதை காலத்தின் கொடுமையாகத்தான் கருதுகிறேன்.
எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு மக்கள் மத்தியில் இருப்பதை நாங்கள் கண்கூடாக கண்டிருக்கிறோம். ஈரோட்டிலே பிறந்து வளர்ந்த எனக்கு இன்று 57 வயதாகிறது. கிட்டத்தட்ட 13 வயதிலேயே நான் பொது வாழ்க்கைக்கு வந்தவன். ஈரோட்டைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். ஈரோட்டில் எந்தப்பகுதி எப்படி இருக்கிறது என்பதுவரை எனக்குத் தெரியும். அனைத்து திட்டங்களையும் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்கேயோ இருந்து இங்கு வந்து எழுதிக்கொடுத்ததை பேசிவிட்டு செல்பவர்களுக்கு எல்லாம் நான் பதில்சொல்லத் தேவையில்லை. ஈரோட்டிற்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் அமைச்சர் முத்துசாமி தொலைநோக்கு சிந்தனையோடு முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.