தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இத்தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்குமுனைப் போட்டி நிலவி வருகிறது. முதன்முறையாக தேர்தலைச் சந்திக்க காத்திருக்கும் தவெக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது குறித்து தமிழக மக்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தான், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக விசில் சின்னத்தை தவெகவிற்கு ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். இதையொட்டி, தமிழக வெற்றிக் கழக்த்தின் முதல் வெற்றி என தவெகவினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில், மாற்றுக் கட்சிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணையும் விழா இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ”தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. இனிமேல், போலீஸ்காரர்களையும், நடத்துநர்களையும் கூட விசில் அடிக்க வேண்டாமென சொல்லிவிடுவார்கள்” என நகைச்சுவையாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ”தவெக தலைவர் விஜய் யாரை கை காட்டுவாரோ அவர் தான் சட்டமன்ற உறுப்பினராக முடியும். தமிழ்நாட்டில் எதிர்கால அரசியல் ஹீரோவாக விஜயே இருப்பார். இதை வரலாறு நடத்திக்காட்டும். தலைவர் விஜயை திமுகவினர் வீடுகள் உட்பட தமிழகத்தில் எல்லோர் வீடுகளிலும் ஏற்றுக்கொள்கிறார்கள். பணமில்லாமல் வெற்றி பெறக்கூடிய ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம் தான். நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. வெளிநாடுகளில் வசிக்கும் 3 லட்சம் மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதற்காக மட்டும் தமிழகம் வரவிருக்கிறார்கள். தமிழகத்தில் நல்லாட்சி வரவிருக்கிறது. மக்கள் சக்தியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. திமுக ஆட்சியை மாற்றுவதற்கு நம்முடைய தளபதி ஒருவரால் மட்டுமே முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.