தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் பரப்புரை இன்று தொடங்குகிறது. 'என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி' என்ற திட்டத்தின் கீழ், திமுக பூத் கமிட்டி குழுவினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தமிழகம், புதுவையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்தவகையில் அதிமுக, தவெக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இயங்கிவரும் நிலையில், திமுகவின் தேர்தல் பரப்புரை இன்றுமுதல் தொடங்க உள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பெயரில் தேர்தல் பரப்புரையை திமுக இன்று தொடங்குகிறது. சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இப்பரப்புரை திட்டத்தின் கீழ், வீடு வீடாக செல்லும் திமுக பூத் கமிட்டி குழுவினர், விடுபட்ட வாக்காளர்களின் விவரங்களை முறையாக சரிபார்ப்பதுடன், அரசின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை விநியோகிக்கின்றனர். இக்குழுவில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.