எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி
எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி pt web
தமிழ்நாடு

“அநீதி, துரோகம், ஓரவஞ்சனை” - மிக்ஜாம் புயலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி.. சாடும் அதிமுக, திமுக

PT WEB

மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வருடம் இறுதியில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல, குறுகிய இடைவெளியில் நெல்லை உள்ளிட்ட தென் தமிழ்நாட்டு மாவட்டங்களிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகினர்.

இதையெல்லாம் குறிப்பிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு 38 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வந்தது.

மிக்ஜாம் புயல்

இந்நிலையில, மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 285 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், 115 கோடியே 49 லட்சம் ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதேபோல, தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிற வெள்ள பாதிப்பிற்காக 397 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், 160 கோடியே 61 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒட்டுமொத்தமாக மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பிற்காக தமிழ்நாடு அரசுக்கு, மத்திய அரசு 276 கோடியே 10 லட்சம் ரூபாயை விடுவித்துள்ளது. ஒதுக்கப்பட்ட தொகை 682 கோடி ரூபாய்.

சமீபத்தில்தான் மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் நிறைவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 682 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் கர்நாடக மாநிலத்திற்கு வறட்சி நிவாரணமாக 3,454 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிப்பு - தொடரும் விமர்சனங்கள்

வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி அண்மையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டம் நடத்திய நிலையில் தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடக்கத்தக்கது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், “எப்போதுமே தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு வழங்கியதில்லை. காங்கிரஸ் மத்தியில் ஆண்டபோது அப்போது திமுக ஆட்சி அதிகாரத்திலிருந்தும் புயல் பாதிப்புக்கான நிவாரண நிதியை தமிழக அரசு கேட்ட நிதியை வழங்கவில்லை.

#BREAKING | கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை: எடப்பாடி பழனிசாமி

திமுகவால் காங்கிரஸிடம் நிதியை கேட்டு பெற முடியவில்லை. பாதிப்பு எவ்வளவு என்பதை அரசுதான் கணக்கிட்டுள்ளது; இந்த நிதி போதுமானதா என்பதை அரசுதான் சொல்ல வேண்டும். அது மட்டும் இன்றி மிக்ஜாம் புயலால் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் இல்லை; கடுமையான மழையால் ஆங்காங்கே வெள்ளம் மட்டுமே வடியாமல் தேங்கி நின்றது” என தெரிவித்தார்.

இந்நிலையில் புதிய தலைமுறையிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “பாஜகவிற்கு எதிரான அரசுகள் இருக்கும் மாநிலத்திற்கு மிகப்பெரிய அநீதியை துரோகத்தை மோடியின் அரசு செய்து வருகிறது. யானைப் பசிக்கு சோளப்பொறி என்பது போல்தான் நிதி ஒதுக்கியுள்ளார்கள். தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் தமிழக மக்கள் தீர்ப்பெழுதிவிட்டார்கள். 4 ஆம் தேதி முடிவு தெரியும்” என தெரிவித்துள்ளார்.

இவர்களின் கருத்துக்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்...