தமிழக எல்லையில் போலீசார் விசாரணை நடத்திய போது
தமிழக எல்லையில் போலீசார் விசாரணை நடத்திய போது File Image
தமிழ்நாடு

"எங்க அப்பாவ பாக்கணும்" இறந்து போன தந்தையை பார்க்க தமிழக எல்லையில் தவித்த பிள்ளைகள்- நடந்தது என்ன?

PT WEB

காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி தமிழகத்திற்குக் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அமைப்பினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் பாதுகாப்பு கருதி கர்நாடக மாநிலத்தையொட்டி தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளான சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் சிக்கலோ அருகே உள்ள கங்கவாடி கிராமத்தில் விவசாயம் செய்து வருபவர் பழனிசாமி. இவர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். பழனிசாமியின் மகன், மகள் மற்றும் உறவினர்களை தமிழ்நாட்டின் சத்தியமங்கலத்தில் பணிபுரிந்து வருகின்றனர்

பழனிசாமி மறைவு குறித்துத் தகவலறிந்த பழனிசாமியின் மகள், மகன், மாமனார், பேரன் உறவினர்கள் என 50க்கும் மேற்பட்டோர் 5 வாகனங்களில் சத்தியமங்கலத்திலிருந்து கர்நாடகா நோக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் சென்றது தமிழகப் பதிவு கொண்ட வாகனம் என்பதால் காரப்பள்ளம் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து சத்தியமங்கலம் எல்லையான அடர்ந்த காட்டுப் பகுதியில் காலை 7:00 மணியிலிருந்து மதியம் 11 மணி உணவு, குடிநீர் மற்றும் இயற்கை உபாதைகளைக்கூட கழிக்க முடியாமல் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். சோதனை சாவடியிலிருந்தது 20 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உணவகங்கள் இருப்பதால் உணவின்றி அவர்கள் தவித்து வந்தாக கூறப்படுகிறது. மேலும் தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் போலீசார் பாதுகாப்பு கருதி அவர்களைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தமிழக எல்லையில் காத்திருந்த கர்நாடக மக்கள்

இச்சம்பவம் குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. இந்த செய்தியின் அடிப்படையில் தமிழக அரசு, ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் ஜவகருடன் கலந்து ஆலோசித்து பாதுகாப்புடன் அவர்களைக் கர்நாடகா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தது.

இதனையடுத்து போலீசார் தமிழக பதிவு கொண்ட 5 வாகனங்களில் பாதுகாப்புடன் புழிஞ்சூர் சாதனை சாவடி வழியாக அவர்களை கங்கவாடிக்கு அனுப்பி வைத்தனர்.