கொலை செய்யப்பட்ட இடம் pt web
தமிழ்நாடு

கை, கால் கட்டப்பட்ட நிலையில் கொடூரம்.. 25 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் கொலை

சேலையூரில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கழுத்தறுத்து கொடூர கொலை செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர் சாந்தகுமார்

சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த மப்பேடு - ஆலப்பாக்கம் சாலை ஓரமிருந்த காலி இடத்தில், தலை மற்றும் கழுத்தில் வெட்டுப்பட்டு, கை கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில், ஒருவர் ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாகச் சேலையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த உடல் கவர், சுடிதார் துணியால் சுற்றப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தகவலின் பேரில் சேலையூர் போலீசார், பள்ளிகரணை துணை ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ சென்று பார்த்தனர். உயிரிழந்த நபருக்கு தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் கடுமையான வெட்டுக் காயங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் கை, கால்களை துணியால் கட்டி கொலை செய்து சம்பவ இடத்தில் வீசிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் சூர்யா(25) என்பதும் இவர் சேலையூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. எலக்டீரிசியனான இவர் வாய் பேசமுடியாதவர் என்பதோடு காது கேளாத தன்மையுடையவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை சூர்யா காதலித்து வந்ததும் அந்த பெண்ணை தனது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. சூர்யா காதலித்த பெண் 18 வயதினை நிரம்பாதவர் என்பதால் பெண்ணை பெற்றோருடன் அனுப்பியதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், இரு குடும்பத்தாரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து பெண்ணை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது.

காதலித்ததன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவரது அண்டை வீடுகளில் இருந்த சிறு சண்டைகளின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், அவரது உடல் கண்டறியப்பட்ட இடத்தில் ஆட்டோ சக்கரங்களில் தடங்கள் இருப்பதும் அதை காவல்துறையினர் சேகரித்து வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாலை முழுவதும் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.