அடேங்கப்பா..! 7 கண்டங்களில் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறி சாதனை; அசத்திய 12 ஆம் வகுப்பு மாணவி!
நாளுக்கு நாள் நாட்டில் நடக்கும் ஸ்வாரஸ்ய சம்பவங்களுக்கு பஞ்சமில்லாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். சின்ன குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரையில் எதாவது ஒருவகையில் எதையாவது சாதித்து காட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதையும் செய்திகளின் வாயிலாக அறிந்துக்கொள்ள முடிகிறது. இந்த வகையில்தான், மும்பையை சேர்ந்த மாணவி ஒருவரும் அசத்தல் சாதனையை படைத்திருக்கிறார்.
மும்பையில் உள்ள நேவி சில்ட்ரன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருபவர்தான் காம்யா கார்த்திகேயன் என்ற பெண். இவருக்கு தற்போது 17 வயது. இவர்தான் ஏழு கண்டங்களில் உள்ள 7 மிக உயரமான சிகரங்களை ஏறிய உலகின் இளைய பெண்மனி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் .
டிசம்பர் 24 ஆம் தேதியன்று, சிலி நேரப்படி, 17.20 மணிக்கு இறுதி சிகரமான அண்டார்டிகாவில் உள்ள வின்செண்ட் மலையின் உச்சியை அடைந்து, சிகரம் தொடும் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.
ஆப்பிரிக்காவில் கிளிமாஞ்சாரோ மவுண்ட் ,ரோப்பாவில் எல்ப்ரஸ் மலை, ஆஸ்திரேலியாவில் கோஸ்கியுஸ்கோ மவுண்ட், தென் அமெரிக்காவில் உள்ள அகோன்காகுவா மவுண்ட், வட அமெரிக்காவில் உள்ள தெனாலி மவுண்ட் மற்றும் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம்தான் இவர் தடம்பதித்தவை.
காம்யாவின் முதல் மலையேற்றத்தின் போது அவரின் வயது 7 என்றும், தனது தந்தை கார்த்திகேயனின் உதவியுடன்தான் தான் மலையேற்றத்தை சாத்தியப்படுத்தி காட்டியதாகவும் தெரிவித்துள்ளார் காம்யா.
காம்யாவின் சாதனயை பாராட்டி இந்திய கடற்படை பதிவு ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
அதில், “ மிஸ் காம்யா கார்த்திகேயன், @IN_NCSMumbai இல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, ஏழு கண்டங்களில் ஏழு உயரமான சிகரங்களை அளந்த உலகின் இளைய பெண்மணி என்ற வரலாற்றை எழுதுகிறார். இந்த முக்கியமான மைல்கல்லை எட்டியதற்காக காம்யா கார்த்திகேயன் மற்றும் அவரது தந்தைக்கு இந்திய கடற்படை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.” என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வரலாற்று சாதனை செய்திருக்கு காம்யாவுக்கு ,சாத்தியப்படுத்த உறுதுணையாக இறுதிவரை நின்ற தந்தைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.