சீமான் - சங்ககிரி ராஜ்குமார் புதிய தலைமுறை
தமிழ்நாடு

புகைப்பட விவகாரம்: “அதுவே ஆதாரம்தான்... அதற்கே ஆதாரம் கேட்கிறார்” - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

“சீமான் அவர்கள், என்னிடம் ஆதாரம் கேட்கிறார். அந்தப் புகைப்படமே ஒரு ஆதாரம்தான். ஆனால் அதற்கே ஆதாரம் கேட்கிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது?” - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

ஜெ.நிவேதா

“நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பிரபாகரனுடன் இருந்த புகைப்படத்தை எடிட் செய்தது நான்தான்” என தனது முகநூல் பக்கத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதியன்று தெரிவித்திருந்தார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இந்த சம்பவம் பரபரப்பானதை அடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் சங்ககிரி ராஜ்குமார். அப்போது புதிய தலைமுறை உடனான தன் பேட்டியில், மீண்டுமொரு முறை அதை உறுதி செய்திருந்தார் அவர்.

அந்தப் பேட்டியை இங்கே, காணலாம்:

இதையடுத்து நேற்று சீமானிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, “சங்ககிரி ராஜ்குமார் 15 ஆண்டுகளாக எங்கு சென்றிருந்தார்? அந்தப் படம் எடிட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” எனக் கேட்டார்.

இதனைத் தொடர்ந்து இன்று சங்ககிரி ராஜ்குமார் வீடியோவொன்று வெளியிட்டுள்ளார். அதில், “சீமான் அவர்கள், என்னிடம் ஆதாரம் கேட்கிறார். அந்தப் புகைப்படமே ஒரு ஆதாரம்தான். ஆனால் அதற்கே ஆதாரம் கேட்கிறார். இதை எப்படி எடுத்துக்கொள்வது?

‘அந்தப் புகைப்படத்தை எப்படி எடிட் செய்தார் ராஜ்குமார்? டெமோ காட்ட வேண்டும்’ என்கிறார். ஒரு புகைப்படம் எப்படி எடிட் செய்யப்படுகிறது என்பது குறித்து இணையத்தில் பல வீடியோக்கள் உள்ளன. நான் வேறு அதை செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறார். பிரபாகரனை பொய்யென சொல்லிவிட்டேன் என்கிறார். நாங்கள் அப்படி சொல்லவில்லை.

நான்தான் அந்த புகைப்படத்தை எடிட் செய்தேன் என்பதற்கு செங்கோட்டையன்தான் சாட்சி. சீமானுக்கு மிகவும் நெருக்கமானவர். நண்பர். அவரை பேசவிட மாட்டேன் என்கின்றனர். செங்கோட்டையன் பேசினால் இதற்கான விடை உடனடியாக கிடைக்கும்.

சீமான் அவர்களுடன் கடந்த காலத்தில் நான் ஃபோன் செய்து பேசியபோது ‘சமூகநீதி குறித்துதான் நாம் பேசி வருகிறோம்; அப்போது பெரியாரை அல்லது பெரியார்வாதிகளை தவறுதலாக பேசினால் அது தவறாகிவிடும் என்பதால் பெரியார் குறித்து தவறாக பேச வேண்டாம்’ எனக் கூறினேன். ஆனால் அவர் ஃபோனை கட் செய்து விட்டார்....

பிறகு மறுபடியும் ஃபோன் செய்தபோது, ‘சரி தம்பி’ எனக் கூறிவிட்டு வைத்துவிட்டார். ஆனால் நேற்று கூறும்போது, ‘வன்னிய மக்களை கைவிட்டு விடாதீர்கள்’ என நான் கூறியதாக கூறுகிறார். வன்னிய மக்கள் மத்தியில் எனது பிம்பத்தை உடைக்கவே இப்படி பேசி உள்ளார். பெரியாரிஸ்ட்ஸ் மத்தியிலும் என்னை சாதிய அடையாளத்துடன் உள்ள நபர் போல காட்ட விரும்புகின்றார்.

நான் பேசியதாக சொல்லும் உரையாடலை சீமான் வெளியிட வேண்டும். சமூக நீதி கருத்து பேசும் சீமான், பெரியாரைப் பற்றி தவறாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழகம் வடமாநிலம் போல மாறிவிடும் சூழல் ஏற்பட்டுவிடும்” என தெரிவித்தார்.