பா.ரஞ்சித் கேள்வி முகநூல்
தமிழ்நாடு

"யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?"- பா.ரஞ்சித் கேள்வி!

இரண்டு ஆண்டுகளாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சிபிசிஐடி, திடீரென விழித்திருப்பதை பார்க்கும்போது, இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுவதாக பா ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

PT WEB

வேங்கைவயல் விவகாரத்தில் யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது? என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், இரண்டு ஆண்டுகளாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த தமிழக சிபிசிஐடி, திடீரென விழித்திருப்பதை பார்க்கும்போது, இவர்கள் யாருக்காக பணி செய்கிறார்கள் என்கிற சந்தேகம் எழுவதாக குறிப்பிட்டுள்ளார்.

உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகத்தான் இத்தகைய சூழ்ச்சியை செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுப்பதாகவும், இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளிகளாக சித்தரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும், நீதிமன்றம் இதனை ஏற்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த முடிவை தமிழக அரசு கண்டிப்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் அல்லது சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரவும் இயக்குநர் பா.ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.