திண்டுக்கல் அருகே பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் நந்தவன பட்டியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனராக இருந்த பசுபதிபாண்டியன் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உட்பட 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து குற்றவாளியான நந்தவனப்பட்டி பகுதியைச் சேர்ந்த நிர்மலா தேவி (60) என்பவரை இன்று (22.09.21) அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி இபி காலனி டேவிட் நகர் அருகே கொலை செய்து தலையை வெட்டி எடுத்துச் சென்று பசுபதி பாண்டியன் வீட்டில் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.
இந்நிலையில், தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் நிர்மலா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆய்வு மேற்கொண்டார். பசுபதி பாண்டியன் கொலை தொடர்பாக பழிக்குப் பழியாக இச்சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.