செய்தியாளர்: மகேஷ் ராஜா
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பண்ணைக்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், கும்பரை பகுதியைச் சேர்ந்த பிரியா என்ற மாணவி படித்து வருகிறார். இந்நிலையில், மாணவி பிரியா நேற்று வழங்கம்போல், மதிய உணவு சாப்பிட்டுள்ளார். இதையடுத்து திடீரென அவர் மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்ட பள்ளி நிர்வாகம், உடனடியாக பண்ணைக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த தலைமை மருத்துவர் பொன்றழுதி, மாணவி பிரியா வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மாணவியின் இறப்பு குறித்து, மருத்துவக் கல்லூரி மருத்துவர்களின் உடற்கூராய்விற்குப் பின்னரே தெரியவரும் என தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் மாணவி ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.