செய்தியாளர்: திவ்யஸ்வேகா
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (26) கூலித் தொழிலாளியான இவர், தனது நண்பர் சரவணக்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேளாங்கண்ணியில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற சுற்றுலா வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சரவணக்குமார் காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார், கருப்பையா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.