செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் செந்தில்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கன்யாவதி ஆகிய இருவரும் ராயர் சிட்ஃபண்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஒடிசா, பீகார் குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏலச்சீட்டு நடத்துவதோடு வட்டி தொழில் செய்து வந்துள்ளார்.
அதே போல பழனி, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளனார். சமீபத்தில் உடுமலையில் ராயல் கார்டன் என்ற பெயரில் மிகப் பிரம்மாண்டமாக வீட்டுமனை விற்பனை வளாகத்தை திறந்துள்ளார். இதற்கிடையில் செந்தில்குமார் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்ததாகவும், வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து தகவலின் அடிப்படையில் (18-12-24) புதன்கிழமை பத்துக்கு மேற்பட்ட கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் சத்திரப்பட்டியில் உள்ள செந்தில்குமாரின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை ஈடுபட்டனர். இதே போல் இவரது நண்பரும் நகைக்கடை உரிமையாளருமான குழந்தைவேல் மற்றும் முருகன் ஆகியோரது ஒட்டன்சத்திரம் தனபாக்கியம் நகைக் கடையிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து நிதி நிறுவன உரிமையாளர் செந்தில் குமாருக்குச் சொந்தமான ஒரு வீட்டின் அருகே இருந்த மற்றொரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்து பத்துக்கும் மேற்பட்ட பைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்கள் குறித்து செந்தில்குமார் மற்றும் அவரது மனைவி கன்யாவதி மற்றும் நிதி நிறுவன பணியாளர்களிடம் மூன்றாவது நாளாக தொடர்ந்து அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வந்தனர்.
அதில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய வருமானவரித் துறையினர் அவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற வருமான வரி சோதனை (நேற்று) வெள்ளிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்தது. இந்த வருமான வரி சோதனையால் ஒட்டன்சத்திரம் மற்றும் சத்திரப்பட்டி பகுதிகளில் செல்வந்தர்கள் நிதி நிறுவன உரிமையாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.