பாஜக - சிபிஎம் இடையே கைகலப்பு pt desk
தமிழ்நாடு

திண்டுக்கல் | பாஜக - சிபிஎம் இடையே கைகலப்பு... மண்டை உடைப்பு சம்பவத்தால் போலீசார் குவிப்பு

திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு கைகலப்பு - பாஜக மாவட்ட துணை தலைவர் மண்டை உடைப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ள்னர்.

PT WEB

செய்தியாளர்: காளிராஜன் த

திண்டுக்கல், தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது சிபிஎம் ஒன்றிய செயலாளர் சரத்குமார் என்பவர் பாஜக அரசை கண்டித்தும், முருக பக்தர் மாநாடு குறித்தும், இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவரின் பெயரை சொல்லி பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த இந்து முன்னணியினர் சிபிஎம் கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு வாதத்தைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் இரு தரப்பினரையும் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர். இந்த கைகலப்பில் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் சரத்குமார் என்பவரும், இந்து முன்னணியைச் சேர்ந்த வினோத் என்பவரும் காயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதையடுத்து இவர்களை பார்க்க வந்த இரு தரப்பினரும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த போலீசார், இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் பாலமுருகன் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனை அடுத்து சிபிஎம் மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.