பாஜக பிரமுகர் கனகராஜ் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சட்டவிரோதமாக மதுபானக்கடை செயல்படுவதாக வீடியோ... திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கைது!

பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

கடந்த 3ம் தேதி மதுரையில் நடைபெற்ற நீதிப் பேரணியில் பங்கேற்க சென்ற திண்டுக்கல் மாவட்ட பாஜக மகளிரணியினர் சிலரை, போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களை பார்க்க சென்ற திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ், காவல் துறையினரை கண்டித்ததுடன், பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தை ஒட்டி செயல்பட்டுவந்த தனியார் மதுபானக்கூடத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்று, சட்ட விரோதமாக அங்கு மதுபானம் விற்கப்படுவதாக தெரிவித்தார். அந்த வீடியோவில் காவல்துறையை கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார்.

அந்த வீடியோவை இங்கு காணலாம்...

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பணியாளர்களை தாக்கியது உள்பட ஐந்து பிரிவுகளில் பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் இன்று மாலை கொடைக்கானல் சென்று விட்டு தனது காரில் பழனிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது பழனி கொடைக்கானல் சாலையில் உள்ள அய்யம்புள்ளி காவல்துறையினர், சோதனைச் சாவடியில் காத்திருந்த போலீசார், பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் மற்றும் பாஜக மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

பாஜக பிரமுகர் கனகராஜ்

மாவட்டத் தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பழனி நகர காவல் நிலைய முன்பாக ஏராளமான கட்சி நிர்வாகிகள் திரண்டனர். பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌