மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் சொன்ன குட்டிக்கதை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே பேசியதை போல் இருப்பதாக வீடியோ ஒன்று வைரலாகிறது.
தமிழக அரசியல் களத்தில் புதிய உதயமாக மாறியிருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது, வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி முழுவீச்சாக செயல்பட்டு வருகின்றது. அதன் பெரிய ஆக்கமாக, மக்களை கவர்ந்திழுக்கும் பெரும் முயற்சியாக மதுரையில் இன்று தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடத்தப்பட்டது.
விஜய் தலைமையில் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட முதல் தவெக மாநாடே தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பிய நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி நடக்கும் இரண்டாவது மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் மதுரை பாரபத்தி பகுதியில் இன்று பெரும் மக்கள் படை சூழை நடைபெற்ற மாநாட்டில், விஜய் சொன்ன 2 குட்டிக்கதைகள் கவனம் பெற்றன. இந்த சூழலில் ஏற்கனவே சீமான் சொன்ன கதையை தான் அப்படியே காப்பியடித்து விஜய் தற்போது கூறியிருப்பதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
மதுரை மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய் உரையின் இறுதியில் தளபதியை தேடும் ராஜா பற்றிய குட்டி கதை ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
அந்தக் கதையில், “ஒரு நாட்டில் ஒரு ராஜா, தனக்கு பக்கபலமாக இருக்க தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளுடன் 10 பேர் தேர்வாகினர். அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென, விதை நெல்லை கொடுத்து அதை வளர்க்கும்படி கூறி தேர்வு வைக்கிறார்.
3 மாதங்கள் கழித்து, அனைவரும் வந்தனர். 9 பேர் விதையை முளைக்கவைத்திருந்தனர், ஆனால் ஒருவர் மட்டும் வெறும் தொட்டியை வைத்திருந்தார். எவ்வளவோ முயன்றும் அது வளரவில்லை என்றார். ராஜா அவரை கட்டியணைத்துவிட்டு, அவரையே தளபதி என்றார்.
காரணம், ராஜா அவர்கள் 10 பேருக்கும் கொடுத்தது அவித்த விதை நெல். அது முளைக்கவே முளைக்காது. 9 பேரும், வேறு விதை நெல்லை வைத்து வளர்த்துள்ளனர்.
இதில் நீங்கள்தான் ராஜா. நீங்கள் தேர்வு செய்யப்போகும் தளபதி யார்?” என்ற கேள்வியோடு முடித்தார் விஜய்.
விஜய் சொன்ன 2 குட்டிக் கதைகள் வீடியோ இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், இதே கதையை சீமான் ஏற்கனவே சொல்லிவிட்டதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
இதற்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் குட்டி கதை சொல்லும் சீமான், “ஒரு அரசனுக்கு வாரிசு இல்லை, தனக்கு பிறகு நாட்டை ஆளும் இளவரசன் யாரு முடிவெடுக்கனும். அப்போது தன் நாட்டு மக்களுக்கு வாரிசாக ஒரு திறமையான இளைஞனைத் தேர்ந்தெடுக்க விரும்பினான். அதற்காக, அவன் எல்லா இளைஞர்களையும் அழைத்து, ஒரு விதையை கொடுத்து, இதை நட்டு செடியை நன்றாக வளர்த்து கொண்டுவருபவர்கள் எவரோ அவரே நாட்டை ஆளுவார்கள் என்று கூறினான்.
பல இளைஞர்கள் விதையை நன்றாக செடியாக வளர்த்து தாங்கள் தான் இளவரசனாக மாறப்போகிறோம் என்ற ஆசையில் கொண்டுசென்று காட்டினர். ஆனால் ஒருவன் மட்டும் விதையை நட்டு செடி வளரவில்லை என்று மன்னனிடம் போய் காட்டினான். மன்னன் நன்றாக செடி வளர்த்த சிறுவர்களை விட்டுவிட்டு, செடியை வளர்க்காத சிறுவனை இளவரசனாக தேந்தெடுத்தார். எல்லோரும் அதிர்ச்சியாகி கேட்க, நான் கொடுத்தது அவித்த விதை அது எப்படி முளையும் என்று அரசன் கேட்டார்” என சீமான் அந்தக் கதையை கூறியுள்ளார்.
விஜய், சீமான் சொன்ன இரண்டு கதைகளுமே ஒரே கதைதான், ஆனால் இருவரும் அதை வேறுமாதிரியாக கூறியுள்ளனர். இந்தக்கதை சிறுவர்களுக்காக எழுதப்பட்ட நீதிக்கதை பகுதிகளில் இடம்பெற்ற கதையென கூறப்படுகிறது. இதனால் சீமான் சொன்னதை காப்பியடித்துவிட்டார் என ஒரு சாராரும், இது பொதுவான நீதிக்கதை இதில் காப்பியடிக்க என்ன இருக்கிறது என்று மற்றொரு சாராரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.