அரசுப் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட விவகாரம்: தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் pt desk
தமிழ்நாடு

தருமபுரி: கழிவறையை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவிகள் - தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

பாலக்கோடு அருகே அரசுப் பள்ளி மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த வீடியோ வைரலான நிலையில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு மலைகிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 150 மாணவர்களும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 5 ஆசிரியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள்.

கழிவறையை சுத்தம் செய்த அரசுப் பள்ளி மாணவிகள்

இந்நிலையில், இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது, கழிவறைக்கு தண்ணீர், நிரப்புவது, பள்ளியை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை, பள்ளி மாணவிகளை வைத்து செய்து வந்துள்ளனர்.

இதை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீடியோவாக எடுத்து, கல்வித் துறைக்கு புகார் அளித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

அரசுப் பள்ளி

அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவ-மாணவிகளை துப்புரவு பணியில் ஈடுபடுத்தும் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் தென்றல், நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது பள்ளி மாணவிகளை, ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணியை, தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் தென்றல் உத்தரவிட்டார்.