2026 சட்டமன்ற இடைத்தேர்தல் pt
தமிழ்நாடு

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்| இதற்கு முந்தைய புள்ளிவிவரம் என்ன? இப்போது யாருக்கு சாதகம்? பாதகம்?

திருப்பூர் மாவட்ட அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஒரு சுவாரசியமான திருப்பத்தை எட்டியுள்ளது.

PT WEB

திருப்பூர் மாவட்டத்தில் அதிமுகவின் பாரம்பரிய கோட்டைகளை புரட்டிய தவெக எழுச்சிக்குப் பிறகு, தாராபுரம் இடைத்தேர்தல் மீது மாநிலம் முழுவதும் கவனம் திரண்டுள்ளது.

கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் ஒட்டுமொத்த அரசியலையும் புரட்டிப் போட்டது தவெக. பாரம்பரியமாக அதிமுகவின் கோட்டையாக விளங்கிய திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி மற்றும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுகவின் வசமிருந்த பல்லடம் ஆகிய தொகுதிகளைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சூழலில்தான், தாராபுரம் தொகுதியின் இடைத்தேர்தல் களம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் இங்கு பதிவான ஒரு லட்சத்து தொண்ணூறாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளில், அதிமுக வேட்பாளர் எண்தாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக இரண்டாம் இடத்தையும், தவெக மூன்றாம் இடத்தையும் பிடித்தாலும், முதன்முறையாகக் களமிறங்கிய தவெக இருபத்து மூன்று சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியை ஈர்த்து இரண்டு திராவிடக் கட்சிகளையும் அதிர வைத்தது.

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

மாநில அளவில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்தாலும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு ஆதரவு தராமல் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. பொதுவாக நகர்ப்புறங்களில் தொழிற்சங்கங்கள் மூலமும், கிராமங்களில் விவசாயச் சங்கங்கள் மூலமும் இடதுசாரிகளுக்குச் செல்வாக்கு இருந்தாலும், தாராபுரத்தில் இவர்களின் தாக்கம் ஆங்காங்கே மட்டுமே உள்ளது. இருப்பினும், உள்ளாட்சித் தேர்தல்களில் இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை வாக்குகளைப் பெறும் திறன் கொண்டது சிபிஐ. மறுபுறம், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கடந்த தேர்தல்களில் ஆறு சதவீதத்திலிருந்து மூன்று சதவீதமாகச் சரிந்திருக்கிறது.

இந்த கணக்குகள் தற்போதைய 5 முனை போட்டியிலால் எப்படி மாறும்? யாருக்கு சாதகம், யாருக்கு பாதகமாக அமையும் என்பதை காணக் காத்திருக்கிறது தமிழ்நாடு.