தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. கட்சியின் வளர்ச்சிப் பாதை மற்றும் நடிகர் விஜய் சந்தித்த சவால்களைப் பற்றி பார்ப்போம்.
கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை அறிவித்தார். கட்சியின் பெயரில் 'க்' எழுத்து விடுபட்டிருந்ததால் எழுந்த விமர்சனங்களுக்குப் பிறகு, பெயரில் திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த மாதத்திலேயே கட்சியின் உறுப்பினர் சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டது. மார்ச் 11ஆம் தேதி சிஏஏ சட்டத்திற்கு எதிராக முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டு, பாஜகவினரின் விமர்சனத்தை எதிர்கொண்டார். 2024 ஜூன் - ஜூலை மாதங்களில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு ஆறுதல் கூறியது, மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். நீட் தேர்வு குறித்த அவரது கருத்துகள் பாஜகவினரிடையே மீண்டும் எதிர்ப்பை ஏற்படுத்தின.
ஆகஸ்ட் 2024: கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தினார். கொடியில் உள்ள 'வாகை மலர்' மற்றும் 'யானை' சின்னம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. பகுஜன் சமாஜ் கட்சி, யானை சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. பல்வேறு தாமதங்கள் மற்றும் நான்கு முறை Bylaw-ல் திருத்தம் செய்த பிறகு, 2024, செப்டம்பர் 8ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.
அக்டோபர் 27, 2024: கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் விஜய் அறிவித்தார். மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தங்கள் கட்சி ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 2024 ஆண்டு இறுதி மற்றும் 2025ஆம் தொடக்கம் வரை அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா, ஆளுநர் சந்திப்பு, தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வு குறித்து அறிக்கை என பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் விஜய் ஈடுபட்டார்.
பரந்தூர் போராட்டக் குழுவினரை சந்தித்தும் ஆதரவு தெரிவித்தார். கடந்த பிப்ரவரியில் பிரசாந்த் கிஷோர்-ஐ சந்தித்து தேர்தல் வியூகம் குறித்துப் பேசினார். தவெகவின் இரண்டாம் ஆண்டு விழாவில், திமுக-வும் பாஜக-வும் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். காவல் துறையினர் தாக்கியதில் உயிர் இழந்த அஜித்குமார் இல்லத்திற்கு கடந்த ஜூலை மாதம் நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய், லாக்கப் மரணங்களுக்கு நீதி கேட்டு போராட்டமும் நடத்தினார். எனினும், 26 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்தப் போராட்டம், 4 நிமிட உரையோடு முடிந்தது விமர்சனத்திற்குள்ளானது.
சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராடிய தூய்மைப் பணியாளர்களை, அண்மையில் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விஜய் சந்திதார். போராட்டக் களத்திற்கு நேரடியாகச் செல்லாதது விமர்சனத்திற்குள்ளானது. கட்சி தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில், விஜய் இரண்டு முறை மட்டுமே போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். ஒன்று பரந்தூர் போராட்டம், மற்றொன்று லாக்கப் மரணத்திற்கு எதிரான போராட்டம்.
இரண்டுமே தவெக சார்பில் திட்டமிடப்பட்ட போராட்டங்கள். மக்களை நேரடியாகச் சந்திக்காமல் இருப்பது, பல முக்கியப் பிரச்சினைகளுக்கு அமைதி காப்பது, குறிப்பாக சாதி விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட கவின் விவகாரத்தில் மவுனம் காப்பது போன்ற காரணங்களால் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். 2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என அவர் பேசினாலும், களத்தில் மக்களைச் சந்திக்காத அவரது அரசியல் அணுகுமுறை, விமர்சனத்திற்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.