செய்தியாளர் - ரா.முருகேசன்
சென்னையை அடுத்த கானத்தூரில் கடந்த 25ஆம் தேதி இரவு காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த இளைஞர்கள் 8 பேர் துரத்தியதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானது. இதுதொடர்பாக கானத்தூர் காவல் துறையினர் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திமுக கொடி பொருத்திய அந்த கார், கிழக்கு தாம்பரத்தில் ஒரு வீட்டில் இருந்துள்ளது. அதனை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்த காரை பயன்படுத்தி வந்தது சந்துரு என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து, வழக்கு தொடர்பாக மற்றொரு காரை பொத்தேரி அருகே பறிமுதல் செய்த காவல் துறையினர், ஒருவரை கைது செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மற்ற இளைஞர்களை தேடி வந்த நிலையில், மேலும் 5 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்து பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இசிஆர் விவகாரம் குறித்து பேசிய துணை ஆணையர், கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் முட்டுக்காடு அருகே காரில் பயணம் செய்த பெண்களை சொகுசு கார் கொண்டு துரத்திய சம்பவம் தொடர்பாக கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளோம்.
இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் அடையாளம் காணப்பட்டு 4 பேர் தற்பொழுது வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்களையும் கானத்தூர் போலீஸ் சார்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் இதுவரையில் பாலியல் ரீதியாக அந்த பெண்களை கைது செய்யப்பட்டவர்கள் துரத்திச் சென்றார்கள் என்பது முற்றிலும் தவறான கருத்து.
மேலும் குறிப்பாக புகார் அளித்த பெண்ணையும் அழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கார் இடிக்கப்பட்டது தொடர்பாக இந்த சம்பவம் நடைபெற்றதாக பரவி வரும் கருத்து முற்றிலும் தவறான ஒன்று என தெரிவித்தார்.
மேலும், கட்சிக்கும் இந்த வாகனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குறிப்பாக காரை ஓட்டிய ஓட்டுநர் அந்தக் கட்சிக் கொடியை பயன்படுத்தியுள்ளார். அவர் எந்த ஒரு கட்சியிலும் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை, மாறாக அவர் சுங்கச்சாவடிகள் மற்றும் வாகன நிறுத்தங்களில் அந்த கொடியை பயன்படுத்துவதற்காக வாகனத்தின் முன்பு அமைத்துள்ளார் என்பது விசாரணை தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வரும் சந்துரு என்ற நபர் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பெண்களை அந்த நேரத்தில் ஏன் அங்கு சென்றீர்கள் என காவல்துறை கேட்டதாக ஒரு தவறான கருத்து பரவி வருகிறது. அவர்கள் புகார் அளிக்க காவல் நிலையம் வந்த உடனே முதல் கட்டமாக சிஎஸ்ஆர் பதிவு செய்து குற்றம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
புகார்தாரர் சம்பவம் நடைபெற்ற அன்று இல்லத்திற்கு திரும்பியவுடன் காவல்துறையை தொடர்பு கொண்ட பத்து நிமிடத்தில் காவல்துறை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக காவல்துறை புகார் அளித்த உடனே புகார் குறித்து நடவடிக்கை மேற்கொண்டதாக புகார் தரப்பினரும் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பாக இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாகனங்கள் 2012 ஆம் ஆண்டு வாங்கப்பட்டு பலரிடம் கைமாற்றப்பட்டு பின்னர் இவரிடம் இங்கு வந்துள்ளது. இந்த வாகனங்களில் உரிமையாளர் பேரானது கன்னியாகுமரியை சேர்ந்த நபர்களின் பெயரில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது.
கட்சிக்கொடி கட்டி இருந்த சொகுசு கார் அனீஸ் என்பவருக்கு சொந்தமான கார், அந்த காரினை கடந்த ஆறு மாத காலமாக சந்துருவிடம் ஒப்படைக்கும்படி பலமுறை தொடர்ந்து கேட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறை சார்பில் சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளோம்.
ஆள் கடத்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட இரண்டு வழக்குகள் தேடப்பட்டு வரும் சந்துரு மீது உள்ளது. கூடிய விரைவில் சந்துருவை ஓர் இரு நாட்களில் கைது செய்து விடுவோம். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை நடவடிக்கையில் எந்தவித ஒரு கால தாமதமும் நடைபெறவில்லை.
குறிப்பாக புகார்தரார் புகாரளித்த உடனே காவல்துறை சார்பில் சிசிடிவின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் முற்றிலுமாக பல தவறான செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே உள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் சந்தோஷ் என்கின்ற மாணவன் மூலம் சந்துருவுக்கு பழக்கம் ஆகி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சென்னைக்கு அருகில் இல்லாமல் வேறு வேறு பகுதிகளில் இருந்தார்கள். மாறாக கானத்தூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட 6 தனிப்படைகளின் அடிப்படையில் இந்த கைதானது தற்போது நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் ஆனது விபத்து நடந்திருக்குமோ என்கின்ற ஒரு கோணத்திலேயே நடைபெற்றது முதற்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது. மேலும் மேற்கொள்ள உள்ள விசாரணையில் இது குறித்த முழு தகவலும் தெரியவரும்.
இசிஆர் வழி வரக்கூடிய பொதுமக்கள் யாரும் அஞ்ச தேவைஇல்லை காவல்துறை தொடர்ந்து தங்களது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக சந்தோஷ், தமிழ் குமரன், அஸ்வின், விஷ்வேஷ்வர் ஆகிய நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வெளியூரை சேர்ந்தவர்கள் மேலும் அவர்கள் இங்கு உள்ள காட்டாங்குளத்தூரில் தங்கி படித்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.