துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

மும்மொழிக் கொள்கை | “தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்” - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

“மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம்” - உதயநிதி ஸ்டாலின்

அங்கேஷ்வர்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 தொடக்க நிகழ்ச்சியின்போது மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். அரசியல் காரணங்களுக்காகவே ஏற்க மறுக்கிறார்கள். தமிழக மக்களின் நலன்களை பார்ப்பதில்லை.

நிபந்தனைகளை ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் வரவேண்டும். அரசமைப்புச் சட்டத்துக்கு மேற்பட்டவர்களாக அவர்கள் நினைக்கிறார்கள். புதிய கல்விக்கொள்கைளை தமிழக அரசு ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

மும்மொழிக் கொள்கை கட்டாயம் எனக் கூறுவதா?: முதல்வர்

மத்திய கல்வி அமைச்சரின் இந்தக் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக புதிய தலைமுறையில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகத்தை சீண்டுவது தீயை தீண்டுவதற்கு சமம்-உதயநிதி

மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.

நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா? தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.

மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது! ” எனத் தெரிவித்துள்ளார்.