திருவண்ணாமலையில் நிலச்சரிவில் ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறோம். மீட்புப்பணிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. அவற்றை முதல்வர் உத்தரவின் பேரில் ஆய்வுசெய்து வருகிறேன்.
நேற்று சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் ஆய்வு மேற்கொண்டேன். தமிழ்நாட்டையே சோகத்தில் அழுத்தக்கூடிய ஒரு நிகழ்வு, கனமழையால் திருவண்ணாமலையில் நிகழ்ந்துள்ளது. அதன்படி வ.உ.சி நகரை சேர்ந்த மலையில் இருந்து விழுந்த பாறையில் 7 பேர் இறந்திருக்கின்றனர்.
அதன்படி மீனா (27), அவரது மகன் கௌதம் (8), மகள் இனியா (5), இவர்களின் பக்கத்து வீட்டிலிருந்து இங்கு விளையாட வந்த ரம்யா (7), வினோதினி (14), மகா (7) ஆகியோர் இறந்துள்ளனர். தீயணைப்புபடையினர், பேரிடர் நலத்துறையினர், அமைச்சர்கள் என எல்லோரும் களப்பணியில் இருந்தனர். ஆனால் எதிர்பாரா விதமாக அவர் இறந்திவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மிகப்பெரிய துயராக இந்நிகழ்வு அமைந்துள்ளது.
இந்த ஏழு பேரின் உறவினர்களுக்கும் எங்களின் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். அனைவரின் குடும்பத்துக்கும் ரூ. 5 லட்சம் நிவாரணமளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நாளைக்குள் அதை ஒப்படைக்க ஆட்சியருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இங்கு பாதுகாப்பற்ற இடங்களில் வசிக்கும் மக்கள், அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள முகாம்களுக்கும், பாதுகாப்பான இடங்களுக்கும் செல்லும்படியும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்” என்றுள்ளார்.