செய்தியாளர்: மணிகண்டபிரபு
தி.மு.க ஐடி விங், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த பதிவில், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து கீழடி ஆய்வுகள் குறித்து எடப்பாடி பழனிசாமியை கேலி செய்து ஒரு கார்டூன் பதிவை வெளியிட்டப்பட்டதற்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பார் முகாம் அலுவலகத்தில் எஸ்.பி.அரவிந்திடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மனு அளித்தார். அதேபோல், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ஐடி விங்க் செயலாளர் ராஜ் சத்யன், தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் தனித்தனியாக மனு அளித்தனர்.
அதிமுகவினர் அளித்துள்ள அந்த மனுவில், எடப்பாடி பழனிசாமியை அவமதிக்கும் வகையிலும், அதிமுகவினரை புண்படுத்தும் வகையிலும் திட்டமிட்ட சதிச்செயல் மேற்கொண்டு சமூக வலைதளத்தில் தவறாக கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளனர். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து ஆபாச கேலிச்சித்திரத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில்...
எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பியவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், ஐடி விங் பொறுப்பாளர் அமைச்சர் டிஆர்பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். அரசியல் இயக்கத்தில் இருந்து திமுக அப்புறப்படுத்தப்பட வேண்டியது என்பது நிரூபணமாகி உள்ளது. 2026ல் நிச்சயமாக இந்த நிலை மாறும். அமைச்சரான டிஆர்பி ராஜா விருப்பு வெறுப்பின்றி இருக்க வேண்டும். சட்ட நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார்.