ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி x
தமிழ்நாடு

கண்முன் இருக்கும் இருவேறு பாதைகள்? ஓ.பன்னீர்செல்வம் முடிவு என்னவாக இருக்கும்?டிசம்பர் 23ல் தெரியுமா?

தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்துவரும் பரபரப்பான அரசியல் மாற்றங்களுக்கு இடையே, டிசம்பர் 23 அன்று தன்னுடைய விசுவாசிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அடுத்தது என்ன? பார்க்கலாம்!

PT WEB

அதிமுக ஒருங்கிணைப்பு என்னவாகும் என்ற கேள்வியோடு, பெரிதும் எதிர்பார்ப்புடன் நிகழ்ந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதுகுறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் உரையை முடித்துவிட்டார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி. ஆனாலும், அவருடைய எண்ண ஓட்டம் என்னவென்பதை முக்கிய நிர்வாகிகளின் பேச்சு கூர்மையாகவே உணர்த்தியது. அதன்படி, அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களையெல்லாம் மீண்டும் அதிமுகவுக்குள் கொண்டுவர வேண்டும் என்று முயற்சிப்பவர்களுக்கும் அதிமுகவில் இடம் இல்லை என்பதே, அதிமுக மறைமுகமாக வெளிப்படுத்திய செய்தியாக இருந்தது.

அதிமுக பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, அதிமுக நிலைப்பாட்டை பாஜக தேசிய தலைமைக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனூடாகவே, அதிமுக ஒருங்கிணைப்புக்கு முயற்சி எடுத்துவந்த தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையும், “தேசிய ஜனநாயகக் கூட்டணி விரிவாக்கம் தொடர்பில் பாஜக தேசிய தலைமையே முடிவெடுக்கும்” என்றும் கூறியிருந்தார்.

தொடர்ந்து, டெல்லிக்குச் சென்ற நயினார் நாகேந்திரன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இத்தகைய சூழலில் தான், தன்னுடைய அதிமுக மீட்புக் குழுவின் பெயரை, அதிமுக மீட்புக் கழகம் என்று மாற்றியதோடு, எம்ஜிஆர் நினைவு நாளுக்கு முந்தைய நாளான டிசம்பர் 23 அன்று அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறார் பன்னீர்செல்வம்.

ஏற்கெனவே, தங்களுடன் இரு கட்சிகள் பேசிவருவதாக பெயர் குறிப்பிடாமல் (மறைமுகமாக திமுக, தவெக அழைப்பை) தினகரன் தெரிவித்துள்ள நிலையில், பன்னீர்செல்வத்தின் நகர்வு பாஜக, அதிமுக இரு கட்சிகளுக்குமே நெருக்கடி கொடுப்பதாக அமைந்துள்ளது. இதற்கிடையில்தான் நயினார் சந்திப்பின் தொடர்ச்சியாக தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை அறிவித்திருக்கிறது பாஜக. தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒட்டி, அடுத்தடுத்து நடந்துவரும் இந்த அதிவேக நகர்வுகள், உள்ளே என்ன நடக்கிறது எனும் கேள்வியை எல்லோரிடமுமே எழுப்பியுள்ளன.

ஓ.பன்னீர் செல்வம்

மேலும், பழனிசாமி தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், பன்னீர்செல்வம் அடுத்தத் தீர்வாக எதை நோக்கி நகர்வார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணி… இவையே பன்னீர்செல்வம், தினகரனின் முதன்மைத் தேர்வுகள். ஆனால், பழனிசாமி இரண்டுக்கும் சம்மதிக்காத சூழலில், திமுக அல்லது தவெக எனும் முடிவை இருவரும் சிந்திக்கக் கூடும் என்கிறார்கள் அவர்களைச் சுற்றியிருப்பவர்கள். அடுத்தது என்ன என்பதை பன்னீர்செல்வம் டிசம்பர் 23 அன்று நடத்தும் கூட்டம் தெளிவுபடுத்தும்!