0மறைந்த தலித் எழில்மலையின் அரசியல் மரபைத் தொடர்ந்து, அவரது மகள்கள் எழில் கரோலின் மற்றும் எழில் கேத்தரின் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெவ்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறங்குகின்றனர். ஒருவர் விசிக சார்பிலும், மற்றொருவர் தவெக சார்பிலும் போட்டியிடுகிறார்கள்.
முன்னாள் மத்திய இணை அமைச்சரும், பாமக மற்றும் அதிமுகவில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவருமான மறைந்த தலித் எழில்மலை அவர்களின் இரண்டு மகள்களும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்குகின்றனர்.
தலித் எழில்மலையின் மகளான எழில் கரோலின் விசிக சார்பில் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் தலித் எழில்மலைக்கு இருந்த செல்வாக்கு இவருக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மற்றொரு மகளான எழில் கேத்தரின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மதுராந்தகம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார். தவெக அறிவித்துள்ள முக்கிய வேட்பாளர்களில் இவரும் ஒருவர்.
மறைந்த தலித் எழில்மலை மத்திய அமைச்சராக இருந்தபோது ஆற்றிய பணிகள் மற்றும் பட்டியலின மக்கள் மத்தியில் அவருக்கிருந்த நற்பெயர் ஆகியவை அவரது மகள்களுக்கு இந்தத் தேர்தலில் முக்கியப் பலமாகப் பார்க்கப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், வெவ்வேறு கூட்டணிகளில் கட்சிகளில் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.