சிலிண்டர் தட்டுப்பாடு - முதல்வர் ஸ்டாலின் web
தமிழ்நாடு

சிலிண்டர் தட்டுப்பாடு| உணவகங்கள் மின்கட்டணத்தில் ரூ.2 சலுகை.. தமிழக அரசு 8 அறிவிப்புகள்!

ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலியாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், தமிழக அரசு முக்கியமான 8 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Rishan Vengai

தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க முதல்வர் ஸ்டாலின் 8 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். உணவகங்களுக்கு மின்கட்டணத்தில் ரூ.2 சலுகை வழங்கப்படும். எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்ட MSME நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும். மேலும், மண்ணெண்ணெய், RDF போன்ற எரிபொருட்களை பயன்படுத்த TNPCB அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், தங்களுடைய உச்ச தலைவர் கமேனியை இழந்த ஈரான் பதிலடி கொடுத்துவருகிறது. அந்தவகையில் உலகில் 20சதவீதம் கச்சா எண்ணெய் எரிபொருள் விநியோக பாதையாக இருந்துவரும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது, மீறி செல்லும் கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கச்சா எண்ணெய்

இந்தசூழலில் பல உலகநாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் 8 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உணவகங்களுக்கு மின்கட்டணத்தில் ரூ.2 சலுகை..

முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், 8 முக்கிய அறிவிப்புகளுடன் ‘#WestAsiaWar காரணமாகப் பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது எனத் தமிழ்நாடு அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம். மக்கள் நலனைக் காக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசின் அறிவிப்பின் படி, ”உணவகங்கள், டீக்கடைகள், Cloud Kitchen உள்ளிட்ட உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் LPG-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்விற்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்!

MSME நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன்!

தமிழ்நாட்டில் 60,698 தொழிற்சாலைகள் LPG, CNG போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக மண்ணெண்ணெய், RDF, HSD, பயோமாஸ் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு TNPCB இசைவாணை (CTE/CTO) பெறத் தேவையில்லை.

இந்த இடர்ப்பாட்டினால் மீதமாகும் தேவைக்கு அதிகமான பாலினைப் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் பால் கூட்டுறவுச் சங்கங்களில் கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பெற்றுக்கொள்ள ஆணை.

உணவகங்கள் மூடப்படும் வேளையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, காய்கறிகள் மற்றும் பழங்களை 194 உழவர் சந்தைகளில் எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் அவர்கள் விற்பனை செய்துகொள்ள அனுமதி.

மாநில அளவில் வணிக நிறுவனங்களுக்கு முறையாக LPG சிலிண்டர் அளவீட்டினை ஒதுக்கீடு செய்து கண்காணிக்க, தலைமைச் செயலாளர் அவர்கள் கண்காணிப்பில், அரசு உயர் அலுவலர்கள் கொண்டகுழு.

மாவட்ட அளவில் எண்ணெய் விநியோக நிறுவனங்களின் பொறுப்பு அலுவலர்களை உள்ளடக்கிய மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு.

இந்த மாதம் பொது விநியோகத் திட்டத்திற்குக் கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஆணை” முதலிய 8 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.