அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலியால் இந்தியாவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சையத் ஹசீனா தலைமையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சையத் ஹசீனா மற்றும் வடசென்னை கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் தாரணி திரவியம் தலைமையில் மண் அடுப்பில் விறகு வைத்து சமைப்பது போலவும், அதே போன்று சிலிண்டருக்கு மாலை அணிவித்து நாமம் போட்டு பின்னர் பிணத்தை தூக்கும் பாடையில் சிலிண்டரை வைத்து நான்கு பேர் தூக்கி வந்து வைத்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து விறகு அடுப்பில் சமையல் செய்வது போல, கண்டன முழக்கங்கள் இட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென சிலிண்டரை பாடையில் வைத்து சாலை நடுவே தூக்கி வந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீஸாருக்கும் பாராட்டுக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர் மாலகொட்டையா என்பவர் உடல்நிலை பாதிப்பால் போராட்டக் களத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த பின்னர் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், அவர் போகும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்