ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக, மத்திய உள்துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 7 பேர் கொண்ட மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. இந்தக் குழுவினர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
அய்யன்கோவில்பட்டு பகுதியில் நெடுஞ்சாலை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதில், மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, புகைப்படங்கள் மூலம் விளக்கப்பட்டன.
அரகண்டநல்லூரில் மத்திய உள்துறை அமைச்சகப் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் மத்திய குழுவினரும், தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும் புயல் சேதத்தை பார்வையிட வந்தபோது, அவர்களை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு, கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அரசூர், இருவேல்பட்டு, திருவெண்ணைநல்லூர், சிறுமதுரை, திருக்கோவிலூர் பகுதிகளிலும் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர். அதேபோன்று, மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் பொன்னுசாமி தலைமையிலான மற்றொரு குழுவினர், வைலாமூர், கருங்காலிப்பட்டு, சென்னாகுனம், அரகண்டநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில், பயிர் சேதம் குறித்தும், தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதி பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து, வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீட்கபட்டவர்களிடம் விசாரித்தனர்.
புயல் வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர் மற்றும் வருவாய் துறை முதன்மை செயலர் அமுதா ஒரு குழுவினருக்கும், மற்றொரு குழுவிற்கு வருவாய் துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி, மாவட்ட ஆட்சியர் பழனி ஆகியோரும் விளக்கி கூறினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலினால் 240 கிராமங்களும், விழுப்புரம் நகரப்பகுதிகளும் பாதிப்படைந்தன. விளைநிலங்களை பொறுத்தவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 80,570 ஹெக்டேர் பாதிப்படைந்தன. மாவட்டம் முழுவதும் 75 சதவிகிதம் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன.
அதேபோல், கடலூர் மாவட்டமும் புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 95 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரைகள் உடைந்தது; சாலைகளை புயல் விழுங்கி சென்றது; ஆடு மாடு கோழி என பலவற்றின் உயிரை பறித்தது; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தது விவசாய நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பாதிப்பு ஏற்பட்டுத்தியது.
இந்நிலையில், மத்தியக் குழு கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டனர். குறிப்பாக தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள மேல்பட்டாம்பாக்கம், அழகிய நத்தம் மற்றும் விளைநிலங்கள், வீடுகளை ஆய்வு செய்தனர். வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். புயல் பாதிப்பு தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியக் குழு பங்கேற்கவுள்ளது. அதன் பின், புதுச்சேரி மாநிலத்தில் வெள்ள பாதிப்பு குறித்து இன்று மாலை ஆய்வு செய்ய உள்ளனர்.