ரயில்வே நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கிறது. கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி இறந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. விபத்தில் படுகாயமடைந்தோருக்கு ரூ.2.50 லட்சமும் காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி அளிக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களுன் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிமிலேஷ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு பேருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்திருக்கிறார்..
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்க்கப்பட்ட மாணவர் செழியனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். திராவிட மணி என்பவரின் குழந்தையான சாருமதி (15) விபத்தில் முன்னதாக உயிரிழந்திருந்த நிலையில், செழியனும் (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். வேனில் பயனித்த நிமிலேஷ் என்ற மாணவனும் உயிரிழந்திருக்கிறார்...
இந்த விபத்து குறித்து கடலூர் எம்பி விஷ்னு பிரசாத் புதிய தலைமுறையிடம் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “ஒரு மீட்டிங்கிற்காக அஸ்ஸாம் வந்திருக்கிறேன். தற்போதுதான் போன் செய்து சொன்னார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்தை தமிழக அரசு வழங்குவதற்கு உண்டான அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன். மாவட்ட ஆட்சியரிடம் பேசினேன். அவரும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்றுகொண்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் வழங்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன், காயமடைந்த அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில் வருவதை டிரைவர் கவனிக்காமல் கடக்க முயன்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது என ரயில்வே நிர்வாகம் தரப்பில் முதற்கட்ட தகவல் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் ரயில் வரும்போது ரயில்வே கேட் மூடப்படாததால் இந்த விபத்து நேரிட்டுள்ளதாக விபத்து நடந்த இடத்தில் குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர் .
மேலும், ஆளில்லாத ரயில்வே கேட் என்பதால் தானியங்கி முறையில் கேட் மூடப்பட சிக்னல் கிடைத்ததா என்பது குறித்து ரயில்வே முதற்கட்ட விசாரணை நடத்தி வருவதாகும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரயில் பள்ளி வாகனத்தில் மோதியதில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மீதமுள்ள குழந்தைகள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என நான்கு பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரண்டு குழந்தைகளின் உடலும் கவலைக்கிடத்தில் இருப்பதாக கடலூர் மாவட்ட மருத்துவ அதிகாரி புதிய தலைமுறைக்கு தகவல் கொடுத்துள்ளார். ரயில்வே எஸ்பி புதிய தலைமுறைக்கு அளித்த தகவலின்படி அந்த பள்ளி வேனில் பயணித்தவர்கள் மொத்தம் ஐந்து பேர் மட்டுமே மூன்று பேர் மாணவர்கள் இரண்டு பேரில் ஓட்டுநர் ஒருவர் உதவியாளர் ஒருவர்.
விபத்துக்கான காரணம்: கேட் கீப்பர் தூங்கியதால் இந்த விபத்து என ரயில்வே எஸ் பி விளக்கம் அளித்திருந்த நிலையில் கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கியபோது, வேன் ஓட்டுநர் வேனை கேட்டை கடக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியதாகவும் அதனாலேயே விபத்து நடந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெற்கு ரயில்வே தரப்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளாது. அத்தோடு அஜாக்கிரதையாக செயல்பட்ட கேட் கீப்பர் சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடலூரில் குழந்தைகளுடன் சென்ற பள்ளி வேன்மீது, சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதி கோரமான விபத்து நிகழ்ந்திருக்கிறது. படுகாயம் அடைந்த மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் செம்மங்குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் இருக்கும் ரயில்வேகேட் மூடப்படாததால் பள்ளிவேன் ரயில்வே ட்ராக்கைக் கடக்க முயற்சித்துள்ளது. அப்போது பள்ளிவேன் மீது ரயில் மோதியதில் கோரமான விபத்து நிகழ்ந்திருக்கிறது. இந்த விபத்தில் தனியார் பள்ளிவேன் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. வேனில் இருந்த குழந்தைகளும் தூக்கிவீசப்பட்டனர்.
விபத்தில் 2 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். பள்ளி வேனை இயக்கிய ஓட்டுநரும்ப டுகாயமடைந்திருக்கிறார். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.