செய்தியாளர்: கே.ஆர்.ராஜா,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சுந்தரமூர்த்தி பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மருத்துவ விடுப்பில் இருந்த சுந்தரமூர்த்தி இன்று காவல் நிலைய பணிக்குச் செல்ல அரசு பேருந்தில் வந்துள்ளார். அப்போது ஆவினன்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு படிக்கட்டின் அருகே வந்துள்ளார்.
அப்போது திடீரென நிலை தடுமாறி ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில், முகத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலைய உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.