கடலூர் மாவட்டம் கீழ் அழிஞ்சிப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பிரியதர்ஷினி என்ற இருளர் சமூகதிதைச் சேர்ந்த சிறுமி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த குழந்தை கடந்த 16ஆம் தேதி பள்ளிக்கு வந்து நிலையில், மயங்கி விழுந்துள்ளார். இதைக்கண்ட ஆசிரியர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பாமல் பள்ளியில் படுக்க வைத்துவிட்டு அதன் பிறகு இரண்டு சக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் குழந்தையின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அங்கு கழந்தை சிகிச்சை பலனின்றி 19ஆம் தேதி உயிரிழந்தார். ஆசிரியர்தான் குழந்தை இறப்புக்கு காரணம் அவர்தான் பொறுப்பேற்க வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்திருந்தனர்.
இதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் கடலூர் கோட்டாட்சியர் அபிநயா ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.
ஆசிரியர் அலட்சியமாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆசிரியர் ரேவதி (தலைமை ஆசிரியர் பொறுப்பு) முதலில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், குழந்தை உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உயிரிழந்த குழந்தை பிரியதர்ஷினி உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.