செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த இந்திரா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியின் இரண்டாவது தளத்தில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்வு நடைபெற்றது. இதில், பங்கேற்க கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் சென்றுள்ளார். அப்போது 6 பேர் செல்லக்கூடிய அந்த லிப்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்று பேர் மட்டுமே சென்று வந்துள்ளனர்.
இதனை அறியாமல் எம்பி உட்பட 6 பேர் லிப்டில் சென்றுள்ளனர். இதனால் திடீரென லிப்ட் பழுதடைந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தங்கும் விடுதி ஊழியர்கள் லிப்டை இயக்கும் முயற்சித்தும் முடியாததால் குறிஞ்சிப்பாடி வடலூர் நெய்வேலி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேர போராட்டத்திற்குப் பிறகு லிப்டை உடைத்து அதில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் லிப்டில் இருந்த ஆறு பேரில் இருவர் மயக்கம் அடைந்த நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது.