ஏஐ துறையில் அதிகரிக்கும் போட்டி - இந்தியாவின் திட்டம் என்ன?
ஏஐ துறை வளர்ச்சிக்காக இந்தியா ஏஐ மிஷன் என்ற பெயரில் விரிவான திட்டத்தை அறிவித்து அதை செயல்படுத்த தொடங்கியுள்ளது மத்திய அரசு. இத்திட்டம் 10 ஆயிரம் கோடி
ரூபாயில் செயல்படுத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
இதில் ஏஐ வளர்ச்சிக்கான மென்பொருள், வன்பொருள் தேவைப்பாடுகளுக்கு தயாராவது, தொழில் திறன் மிக்கவர்களை உருவாக்குவது உள்ளிட்ட அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன.
தற்போதைய நிலையில் ஏஐ துறையின் முன்னேற்றத்தில் உலகளவில் இந்தியா 4ஆம் இடத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. எனினும் முதல் இரு இடங்களில் உள்ள அமெரிக்கா, சீனாவை விட இந்தியா வெகுவாக பின்தங்கியுள்ளதாகவும், இந்த இடைவெளியை குறைக்க மிகப்பெரிய நடவடிக்கைகள் முன்னெடுப்புகள் தேவைப்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா எந்தவிதத்தில் பின்தங்கியுள்ளது..
இந்தியாவில் SOFTWARE எனப்படும் மென்பொருள் துறை சார்ந்த திறன் அதிகளவில் இருந்தாலும், HARDWARE எனப்படும் வன்பொருள் சார்ந்த திறனில் பின் தங்கியுள்ளதாகவும், இதிலும்
வலுப்பெறுவதுடன் அனைத்து பிரிவினரும் பயனடையும் வகையிலான வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் உள்ளன.
ஏஐ துறை வளர்ச்சிக்காக சென்டர் ஃபார் எக்சலன்ஸ் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவம், விவசாயம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் தேவைக்கேற்ற தீர்வுகளை உருவாக்க முடிவதுடன், அதற்கேற்ற தொழில்நுட்ப திறன்
மிக்கவர்களையும் உருவாக்க முடியும் எனக்கூறப்படுகிறது.
அதே நேரம் ஏஐ துறையில் புத்தாக்க தொழில்முனைவோருக்கு ஊக்கம் அதிகளவில் தேவைப்படுவதாக கூறுகிறார் அதில் ஈடுபட்டுள்ள செந்தில்நாயகம்.
இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகள்..
ரோபோடிக்ஸ், கோடிங், ஏஐ உள்ளிட்டவற்றை பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு புரிதலையும், திறனையும் ஏற்படுத்த, அடல் டிங்கரிங் ஆய்வகங்களுக்கு தொடர்ந்து முதலீடுகள் மேற்கொள்ளப்படும் எனவும்
கூறப்பட்டுள்ளது.
அரசுத் துறைகள் தவிர தனியார் நிறுவனங்களும் ஏஐ துறையில்
வேகம் காட்டி வருகின்றன. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய தரவு மையத்தை குஜராத்தின் ஜாம் நகரில் அமைக்கப்போவதாக கூறியுள்ளார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி.
மற்றொரு பெரும் தொழிலதிபரான அதானியும் ஏஐ தொழிலில் அதிகளவில் முதலீடுகளை அறிவித்துள்ளார். ஓபன் ஏஐ தலைவரான சாம் ஆல்ட்மேன் இந்தியா வந்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஹ்ணவை சந்தித்து பேசியுள்ளார். இதில் குறைந்த விலையிலான ஏஐ மாடல்களை உருவாக்குதல் GPU மேம்பாடு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேற்குலகில் பல நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கிவிட்டு ஏஐ
தொழில்நுட்பத்தை பயன்படுத்தத்தொடங்கிவிட்ட நிலையில், இந்தியாவிலும் இந்த போக்கு சில ஆண்டுகளில் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தயாராக வேண்டிய கட்டாயம் சாமானியர்களில் இருந்து அரசு வரை ஏற்பட்டுள்ளது.