நிர்மல் குமார் - ஆதவ் அர்ஜூனா Pt web
தமிழ்நாடு

ஆதவ் அர்ஜூனா பையில் உயர் ரக மதுபானமா.? பரவிய செய்திக்கு தவெக நிர்வாகி விளக்கம்.!

டெல்லி செல்வதற்காக விமான நிலையம் சென்ற ஆதவ் அர்ஜூனாவின் பையில் உயர் ரக மதுபானம் ஒன்று கண்டறியப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவிய நிலையில், அதற்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

Premkumar S

கரூர் தவெக வழக்கில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், ஆதவ் அர்ஜூனா பையில் மதுபானம் இருந்ததாக பரவிய தகவல் பொய்யானது என தவெக துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. அதன்படி, தவெக முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியிருந்த சிபிஐ 2-ஆம் கட்டமாக அக்கட்சியின் தலைவர் விஜயிடம் விசாரித்து வருகிறது. ஏற்கனவே, ஜனவரி 12 மற்றும் 19ஆம் தேதியன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக விஜய் ஆஜராகியிருந்த நிலையில், நாளை 3வது முறையாக விசாரணைக்கு ஆஜராக இருக்கிறார். இதற்காக, இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லிக்கு தனிவிமானம் மூலம் சென்றுள்ளார். அவருடன், தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் விஜயின் உதவியாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேர் சென்றுள்ளனர்.

விஜய்

முன்னதாக, விமான நிலையத்திற்கு விஜய் கொண்டு சென்றிருந்த கைப்பையில் கத்தரிக்கோல் இருப்பதை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்ததையடுத்து அவரிடம் இருந்த கத்தரிக்கோல் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, விஜய் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டத்தில் டெல்லி செல்வதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனிவிமானம் மூலம் தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

இதற்கிடையில் தான், ஆதவ் அர்ஜூனா கொண்டு சென்ற பையில் உயர் ரக மதுபானம் ஒன்று இருந்ததாகவும், அதனைப் பாதுகாப்பு படையினர் கண்டறிந்து பறிமுதல் செய்தனர் எனவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.

இந்த சூழலில் தான், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியைச் சுட்டிக்காட்டி, “இது முற்றிலும் பொய்யான தகவல். இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை” என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.