தமிழக அரசின் கைது நடவடிக்கைக்கு சிபிஎம் பெ.சண்முகம் கண்டனம் web
தமிழ்நாடு

மாணவர்கள் போராட்டம்| ’தமிழ்நாடு அரசின் கைது நடவடிக்கை கண்டனத்திற்குரியது..’ - சிபிஎம் சண்முகம்

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தும் மாணவர்களை தமிழ்நாடு அரசு கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்று சிபிஎம் சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

நீட் தேர்வு முறைகேடு காரணமாக மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என டெல்லியில் மாணவர்கள் தொடர்ச்சியாக போராட, அவர்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான அடக்குமுறை நடத்தியது. இதை கண்டித்து சென்னையில் DYFI, SFI அமைப்புகள் போராட்டம் நடத்தியபோது, தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுப்பு, தடுப்பு, கைது நடவடிக்கைகள் எடுத்தது ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என பெ. சண்முகம் எக்ஸ் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 1 மாதங்களாக நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள், கூட்டத்தொடரின் முதல்நாளான கடந்த 20ஆம் தேதி பேரணியில் ஈடுபட முற்பட்டனர். எனினும், அவர்களை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசி டெல்லி காவல்துறையினர் கட்டுப்படுத்தியிருந்தனர். இந்த தாக்குதலில், 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்திருக்கும் சூழலில், 6 வயது சிறுவன் ஒருவரும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து தமிழ்நாட்டில் சென்னையிலும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தசூழலில் நேற்று சென்னை எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தமிழக காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர். தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெ. சண்முகம் கண்டனம்..

தனது எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சிபிஎம் சண்முகம், “நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் அடக்குமுறைகளை மீறி மாணவர்களின் போராட்டம் இரவு - பகலாக‌ தொடர்ந்து நடைபெறுகிறது.

டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் கொடூரமான தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் போராடுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பதும், தடுப்பதும், கைது செய்வதும் வன்மையான கண்டனத்திற்குரியது.

நேற்று மாலை DYFI -SFI சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து இரவு 10மணிக்கு மேல் விடுவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்குவதை ஒரு போதும் ஏற்கமுடியாது.

போராட்டத் தீ பரவட்டும்” என கண்டனத்தை தெரிவித்துள்ளார்.