'ஜனநாயகத்தை நசுக்கும் செயல்..' அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கண்டனம்!
தேசியத் தலைநகர் டெல்லியில் அமைதி வழியில் போராட்டம் நடத்திய மாணவர்கள், ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் தலைவர்கள் மீது காவல் துறையினர் நடத்தியுள்ள தாக்குதல் மற்றும் வலுக்கட்டாயக் கைது நடவடிக்கைக்குத் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துத் அமைதியான முறையில் போராடுபவர்கள் மீதான நடவடிக்கையை "ஜனநாயகத்தை நேரடியாக நசுக்குவது" என்று ஆதவ் அர்ஜுனா, NEET தேர்வுக்கு எதிரான தமிழகத்தின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியும் தனது X தளத்தில் ஒரு அறிக்கையை பதிவு செய்துள்ளார். அதில்
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! 'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது.
அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல்.
மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்! என்று பதிவிட்டுள்ளார்.
