அமைச்சர் மா.சுப்பிரமணியன் pt web
தமிழ்நாடு

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததாக புகார்| மா.சுப்பிரமணியன் வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்த வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான குற்றம் சாட்டு பதிவு ஜூலை 24 ம் தேதி நடத்தப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு சிட்கோவின் சார்பில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலத்தை தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

மா.சுப்பிரமணியன்

இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா என இருவர் மீதும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது. தன்மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மா.சுப்பிரமணியன், அவரின் மனைவி தரப்பில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மா.சுப்பிரமணியன்

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வெங்கடவரதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மா.சுப்பிரமணியன் தரப்பில், தன் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் கோடை விடுமுறை காரணமாக அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்பதால் குற்றம் சாட்டு நடைமுறையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, வழக்கில் எந்த வித கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது எனக் கூறி அடுத்த விசாரணைக்குள் உச்ச நீதிமன்ற உத்தரவை பெற அறிவுறுத்தனார். இல்லையென்றால் ஜூலை 24 ம் தேதி மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவி மீது குற்ற சாட்டு பதிவு நடைமுறை மேற்கொள்ளப்படும் எனக்கூறி அன்றைய தினத்திற்கு வழக்கினை தள்ளி வைத்தார்.