ஈரானின் 'இதயத்தை' தாக்கிய இஸ்ரேல்; வெடித்து சிதறிய எண்ணெய் கிடங்குகள்! இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், அங்குள்ள எண்ணெய் கிணறுகள், சேமிப்பு கிடங்குகள் பற்றி எரிகின்றன. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ளது.ஈரானின் எண்ணெய் கிணறுகள் சேதமடைந்ததால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு விரிவாக பார்க்கலாம்!
ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டி வந்ததால் அந்நாட்டின்மீது கடந்த 13-ம் தேதி இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரானின் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன.. ஈரானின் ராணுவ முகாம்கள் பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஈரானின் அணு விஞ்ஞானிகள் ராணுவ தளபதிகள் என பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து சக்திவாய்ந்த ஏவுகணைகள், ட்ரோன்கள் வீசி அதிதீவிர தாக்குதல் நடத்தியது ஈரான். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள சில குடியிருப்பு பகுதிகள் பலத்த சேதமடைந்தன. 3 பேர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்தது. இதனையடுத்து கடந்த 3 நாட்களாக இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளையும், டிரோன்களையும் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்கான ஷாரன் கிடங்கு மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில் எண்ணெய் கிடங்குகள் தீ பிடித்து எரியத்தொடங்கின.தீ விபத்து காரணமாக எண்ணெய் கிடங்குகளில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரானின் எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டுள்ளதால் உலக கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்! உலகில் நான்காவது பெரிய எண்ணெய் இருப்பு கொண்ட நாடு ஈரான்..அதே போல் உலகின் இரண்டாவது பெரிய எரிவாயு இருப்பையும் ஈரான் கொண்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராக ஈரான் செயல்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 3 மில்லியன் அதாவது 30 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஈரான் உற்பத்தி செய்கிறது. இது மொத்த உலக உற்பத்தியில் மூன்று சதவீதமாகும். தற்போது ஈரானின் எண்ணெய் கிணறுகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது..இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் விநியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்..அதே போல உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இப்படியான சூழலில், ஈரானின் கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்தால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் எண்ணெயை மற்ற நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்கலாம் என்பதே இந்தியாவுக்கு உள்ள சாதகமான விஷயம் என்கின்றனர் வல்லுநர்கள்.