செய்தியாளர்: சாந்த குமார்
கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை கொடுத்த பாலியல் புகாரின் பேரில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இல்லத்திற்குச் சென்ற போலீசார், அங்கு சம்மனை ஒட்டிச் சென்றனர்.
இதையடுத்து சம்மனை ஒட்டிச் சென்ற சிலமணித் துளிகளில் சம்மன் சுபாகர் என்பவரால் கிழிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து நீலாங்கரை சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பிரவீண் ராஜேஷ் சீமான் வீட்டிற்கு அதிரடியாகச் சென்று அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது பாதுகாவலருக்கும் ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.
இதனால் பாதுகாவலர் இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார் இதையடுத்து அவரிடமிருந்து உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் வளசரவாக்கம் போலீசார் கொடுத்த புகாரின் பேரில், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சம்மன் ஒட்டும் போது இடையூறு செய்தது, மிரட்டல் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் கொலை முயற்சி ஆயுதத்தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அன்றைய தினம் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் வளசரவாக்கம் போலீசார் கொடுத்த புகாரில் மட்டும் சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் ஒரு வழக்கு இருப்பதால் தொடர்ந்து இருவரும் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது.